நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை IMF அடுத்த தவணை காலவரையின்றி ஒத்திவைப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அடுத்த தவணை, குறிப்பிடப்படாத காலத்திற்கு ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த கடன் தவணையை விடுவிக்க தேவையான முக்கிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாததே இதற்குக் காரணம்.
கடன் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வுக்கான ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், அந்த தொகையை விடுவிக்க நிர்வாக சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
அதற்கு முன், செலவின அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் மின்சார கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படவிருந்த தீர்வை வரி முறை இதுவரை அறிமுகப்படுத்தப்படாததும் இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் ஊடகங்களை சந்தித்து இந்த விஷயங்களை வலியுறுத்தினார்.