9 லட்சம் பணத்துடன் பேருந்தின் மேலே 7 மணி நேரம்… பெருவெள்ளத்தில் ஒரு பகீர் சம்பவம்

பேய் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்ட இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில், ஒரு பஸ் டிப்போ மேலாளரின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.

சுமார் 9 லட்சம் பணம் மழையில் நனைந்து, பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க 7 மணி நேரம் உயிரை பணயம் வைத்து பஸ் டிப்போ மேலாளர் ஒருவர் செய்யும் தொழில் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பஸ் டிப்போ மேலாளராக பணியாற்றி வருகிறார் ரஞ்சித் ராஜெ ஷிர்தெ. பெருவெள்ளத்தில் டிப்போ கட்டிடமும் அங்கிருந்த பேருந்துகளும் மூழ்க தொடங்கியது.

அங்கிருந்து தப்ப முடியாமல் ஷிர்தெ மட்டும் சிக்கிக்கொள்ள, பணத்துடன் பேருந்து ஒன்றின் மேலே ஏற அவர் முடிவு செய்துள்ளார்.

பேருந்து மூழ்கும் அளவுக்கு வெள்ளம் பெருகிய நிலையிலும் 7 மணி நேரம் ஷிர்தெ காத்திருந்துள்ளார். பணத்தை அலுவலகத்தில் பாதுகாத்திருந்தால் கண்டிப்பாக வெள்ளத்தில் காணாமல் போயிருக்கும்.

ஆனால் அவ்வாறு நேர்ந்தால் அதற்கான பொறுப்பு தன்மீது சுமத்தப்படும் என்பதை அறிந்து, இக்கட்டான வேளையில் அரசுக்கான பணத்தை பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு என உணர்ந்ததாக ஷிர்தெ கூறியுள்ளார்.

நீண்ட 7 மணி நேரம் காத்திருந்த நிலையில், மீட்புக்குழுவினரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டதாக ஷிர்தெ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.