சமூக ஊடகங்களால் அறிமுகம்… தொடர் தொல்லை: இறுதியில் வீட்டுக்குள் நுழைந்து இளைஞரின் கொடூரம்

கேரள மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த மருத்துவ மாணவியை வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம் பகுதியிலேயே பட்டப்பகலில் பொதுமக்களை மொத்தமாக உலுக்கியுள்ள இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின் போது மருத்துவ மாணவி மானசா தமது தோழிகளுடன் தங்கியிருந்த குடியிருப்பில் மதியம் உணவருந்தியபடி இருந்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திடீரென்று அந்த குடியிருப்புக்குள் புகுந்த ரகில் என்ற இளைஞர், மானசாவை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். உள்ளே இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே திடீரென்று இரண்டு முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அலறல் சத்தமும் கேட்கவே, அறைக்கு வெளியே பதற்றத்துடன் காத்திருந்த மானசாவின் தோழிகள் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த அறைக்குள் இருந்து மீண்டும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கவே, அறை கதவை உடைத்துக் கொண்டு மானசாவின் தோழிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.

அங்கே, மானசா மற்றும் ரகில் ஆகிய இருவரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளனர். உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தும், இருவரும் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மானசாவை மிக அருகில் நின்றே ரகில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனவும், இதனால் துப்பாக்கி குண்டு அவர் மண்டை ஓட்டினை துளைத்து வெளியேறியதாகவும், ஒரு குண்டு அவர் மார்பில் பாய்ந்திருந்ததகாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவியான மானசா கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கோதமங்கலம் பகுதியில் தோழிகளுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரகில் சமூக ஊடகம் வாயிலாகவே மானசாவுடன் அறிமுகமாகியுள்ளார். இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஆனால் தமக்கான நபர் ரகில் இல்லை என்பதை மிக சீக்கிரத்தில் உணர்ந்து கொண்ட மானசா மனந்திறந்து ரகிலிடம் பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருந்துள்ளனர்.

ஆனால் நாளடைவில் ரகிலின் நடவடிக்கையில் மாற்றம் வரவே, ஒருகட்டத்தில் ரகில் தொல்லை தாங்காமல் பெற்றோர் மூலம் பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து ரகில் தொல்லை தரவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் அதன் பிறகு பகையுடன் இருந்த ரகில், ராணுவத்தினர் பயன்படுத்தும் ஒருவகை துப்பாக்கியுடன் சம்பவத்தன்று மானசாவின் குடியிருப்பில் நுழைந்து சுட்டுக் கொன்றதுடன் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.