அதிபர் – ஆசிரியர் போராட்டம்: கைதான 44 பேருக்கும் கொரோனா இல்லை! பொலிஸ் பேச்சாளர் தகவல்.

“தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் 44 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச் செய்தல், சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அதிபர்கள் – ஆசிரியர்கள் வாகனப் பேரணியூடாக வந்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 16 பெண்கள் உட்பட 44 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நேற்று ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகவில்லை. அத்துடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.