மலையக கலைஞர் மாத்தளை கார்த்திகேசு மறைந்தார்

மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான கருப்பையாப்பிள்ளை கார்த்திகேசு (மாத்தளை கார்த்திகேசு) இன்று காலமானார்.

இன்று (06) மாத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கருப்பையாப்பிள்ளை கார்த்திகேசு என்ற இயற்பெயர் கொண்டு “மாத்தளை கார்த்திகேசு” என்ற புனைப்பெயரால் மலையக கலைத்துறையை மட்டுமல்லாது இலங்கை தமிழ் கலைத்துறையில் தவிர்க்கப்பட முடியாத நபராக திகழ்ந்தார்.

இவர் மாத்தளை விஜய கல்லூரி மற்றும் மாத்தளை கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

மாணவராக இருந்தபொழுதே நலமே புரியின் நலமே விளையும்,  அன்பின் வெற்றி, இதுதான் முடிவு  ஆகிய மேடை நாடகங்களில் நடித்து  நாடகத்துறையில் ஒரு சிறந்த கலைஞனாக அறிமுகமானார்.

பின்னர் 1960 களில் ஹட்டன் நகரில் நடைபெற்ற கலைவிழா வில்  சிங்ககிரிச் செல்வி என்னும் நாடகத்தில் நடித்து முதலிடத்தில் தெரிவானார்.

தீர்ப்பு,  காலங்கள் அழிவதில்லை, களங்கம் , போராட்டம்  , ஒரு சக்கரம் சுழல்கிறது
போன்ற இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மாத்தளை கார்த்திகேசு”அவர்கள் எழுதிய “குடும்பம் ஒரு கலைக் கதம்பம்” ,”காலங்கள்” போன்ற நாடகங்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற நாடகங்கள் ஆகும்.

இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட திரைக்கதை வசனம் எழுதும் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பெருமையும் “”மாத்தளை கார்த்திகேசு” அவர்களுக்கு உண்டு,

இலங்கையில் தமிழ் திரையுலகில் இவரது  சுட்டும் சுடர் , பரிசு பெற்ற திரைப்பிரதியாகும்.

“மாத்தளை கார்த்திகேசு” அவர்களால் தயாரித்து திரைக்கதை வசனம் எழுதி உருவான திரைப்படம் “அவள் ஒரு ஜீவநதி” இத்திரைப்படத்தில் இவர் நடித்தும் உள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அன்று மக்கள் மனதில் இடம் பிடித்தவையாக இருந்தன. எம்.எஸ்.செல்வராஜாவின் இசையில், ஈழத்து இரத்தினம், மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களை வி,முத்தழ்கு, கலாவதி, சுஜாதா, எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை, ஜோசெப் இராஜேந்திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினார்கள்.

17.10.1980ல் ஆறு இடங்களில் “அவள் ஒரு ஜீவநதி’ திரையிடப்பட்டது. கொழும்பில் செல்லமஹால் திரையரங்கில் 22 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், ஏனைய இடங்களில் குறைந்த நாட்களே ஓடின.

இலங்கை கலைஞரான மறைந்த

மாத்தளை கார்த்திகேசு அவர்களுக்கு

சிலோன் மிரர் தனது அஞ்சலியை செலுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.