இசாலினி அறையில் சிக்கிய சாரமும் துணித் துண்டும் யாருடையது? அழுத்தம் கொடுத்த பொலிஸ் அதிகாரி யார்? – விசாரணையின் விபரம்

இசாலினி அறையில் சிக்கிய சாரமும் துணித் துண்டும் யாருடையது? அழுத்தம் கொடுத்த பொலிஸ் அதிகாரி யார்? – நேற்றைய விசாரணையின் முழு விபரம் இணைப்பு

 

உயிரோடு இருந்த இசாலினியைவிட மரணமடைந்த இசாலினி பலமடைந்துள்ளதாக  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தவாறு ,  இசாலினி தொடர்பான  விசாரணை முன்னேற்றங்ளை நீதிமன்றில் நேற்று 9ம் திகதி முன்வைத்தார்.

இசாலினி போன்ற மற்றுமொரு  யுவதிக்கு  இவ்வாறு நடக்காத வகையில்  குற்றவாளிகள்  தண்டிக்கப்பட வேண்டும்  எனவும் அதற்கு  அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்  எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  இசாலினியை முற்பகல் 11.20 மணிக்கு  பரிசோதனை செய்த வைத்தியர்  ஒருவர்  இசாலினி முழு சுயநினைவில் இருப்பதாக  புத்தகத்தில் பதிவுசெய்துள்ளதாகவும்  ஆனால்  அதற்கு  முன்னர்  இசாலினியை பரிசோதனை செய்த மூன்று வைத்தியர்கள்  இசாலினி  தனது பெயரைசொல்லும் அளவு மாத்திரமே சுயநினைவுடன் இருப்பதாகவும் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

குறித்த வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளதாகவும்  அவர் நாடு திரும்பியதும்  விசாரணை செய்து  அறிக்கை சமர்பிப்பதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

இசாலினி தீ காயங்களுடன் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டபோது  நடந்த  விசாரணைகளுக்கு பொலிஸ்  தலைமையக கொவிட் தடுப்பு பிரிவில் பணியாற்றும்  பிரதான பொலிஸ்  பரிசோதகர் லபார்  பல அழுத்தங்களை கொடுத்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இசாலினி தீ காயங்களுக்கு உள்ளான பின் பொரளை பொலிஸார்  நடத்திய முதல் விசாரணையில்  வீட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு  அழைக்கப்படவில்லை எனவும் , பொலிஸார் பதியூதின் வீட்டிற்கு சென்று  விசாரணை நடத்தியதாகவும் அப்போது இந்த லபார் என்ற பொலிஸ் பரிசோதகர்  ரிசாத் பதியூதின் வீட்டில் இருந்துள்ளதாகவும்  பிரதம சொலிசிட்டர் ஜெனரல்  நீதிமன்றில்  குறிப்பிட்டுள்ளார்.

இசாலினி விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினிடம்  கடந்த 8ம் திகதி வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் , பாலியல்  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பதியூதினின் மைத்துனன் கிதர் மொஹமட் சியாப்தீன் இஸ்மத்  என்பவர்  குறித்து கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில்  தகவல்கள்  முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு குறித்து  கருவாத்தோட்ட பொலிசார் ,  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ரிசாத் பதியூதின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவின் டிவிஆர்  உபகரணம்  இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் , அதன்  அறிக்கையை  நீதிமன்றில் சமர்பிக்குமாறு பணிக்கும்படியும் திலீப பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

இசாலினி தங்கியிருந்த அறையில் இருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி பொகாவத்த குழுவினர் கண்டுபிடித்த நீலம் மற்றும் செம்மஞ்சள் கோடுகள் கொண்ட துணித்  துண்டு  மற்றும் அதற்கு சமனான சாரம் என்பவற்றை  இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் அதன்  அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ​​ஜெனரல் கூறியுள்ளார்.

டிவிஆர்  உபகரண அறிக்கையை அரச தரப்பிற்கு வழங்குமாறு  நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

ரிசாத் பதியூதின் வீட்டில் பணிபுரிந்த இசாலினிக்கு பதியூதினின் மனைவியால்  பழைய  உணவுகளே வழங்கப்பட்டதாகவும் , வழங்கும் உணவை தவிர வெறு உணவு உட்கொள்ள இசாலினிக்கு வாய்ப்பு இருக்கவில்லை எனவும் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் இடம்பெறும்.Recommended News

Leave A Reply

Your email address will not be published.