நல்லூர் ஆலயத்துக்கு வருவதைத் தவிருங்கள்! – யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்

“கொரோனாப் பரவல் காரணமாக நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. எனவே, ஆலயத்துக்கு வருவதைத் தவிருங்கள்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார்.

இன்று ஆரம்பமாகியுள்ள நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 25 நாட்கள் வரை மகோற்சவம் நடைபெறவுள்ளது. தற்போது நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் தீவிரமாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள கொரோனா தீவிர  நிலையில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சால்  சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தச் சுற்றிநிருபங்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர சபை, ஆலய நிர்வாகம் மற்றும் பொலிஸார் இணைந்து ஆலய உற்சவத்தைப் பாதுகாப்பான முறையில் எவ்வாறு நடத்துவது  தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

அந்த முடிவின் பிரகாரம் நல்லூர் ஆலய வளாகத்துக்குள் ஆலய நிர்வாகத்தினரால் அனுமதி அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு  எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எனவே, பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு ஆலயத்துக்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். வீடுகளில் இருந்தவாறு நேரடியாக ஒளிபரப்பப்படும் ஆலய உற்சவத்தைத் தரிசியுங்கள். அவ்வாறு தரிசிப்பதன் மூலம் தொற்று நிலைமையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தற்போது நாட்டில் கொரோனா பரவல்  நிலைமை தீவிரமாகக் காணப்படுகின்றது. அந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.