சீனாவின் விளையாட்டுத்திடலாக ஆப்கான் மாறுவதற்குத் தலிபான் இடமளிக்கக்கூடாது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து.

“கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில்கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டுத் திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்கக் கூடாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளைப் பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்று தரும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தங்களது எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ள ஆப்கான் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. கடந்த பல பத்தாண்டுகளாக முதலில் அன்றைய சோவியத், பின்னர் இன்றைய அமெரிக்கா என்ற இரண்டு வல்லரசுகளின் விளையாட்டுத்திடலாக ஆப்கான் இருந்தது.

தலிபான், முஹாஹிஜிதீன்களின் நிர்மாணத்துக்கே அமெரிக்கர்தான் பிள்ளையார் சுழி போட்டனர். ஆனால், இடைக்காலத்தில் தலிபான்களின் ஆட்சி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை. அனைத்துலகம் ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை பட்டயத்தை மிகவும் ஆவேசமாக அவர்கள் மீறினார்கள். அனைத்துமே மேற்கத்தேய ஊடாக அவப்பிரசாரம் என்று அவர்கள் இன்று பூசி மெழுக முடியாது. எனினும், இன்று காலம் அவர்களுக்குப் பாடம் படிப்பித்து இருக்கும் என நம்புவோம்.

வல்லாதிக்க நோக்கங்களுக்கு வெளியே தம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அப்பாவி ஆப்கான் மக்களுக்கு இருக்கின்ற உரிமையை, முதலில் ஆப்கான் ஆட்சியாளர்கள்தான், அவர்கள் எவராக இருந்தாலும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில்கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டுத்திடலாக ஆப்கான் மாற, தலிபான்கள் இடமளிக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளைப் பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும்.

சமூக நீதி, சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செயவதற்குமான ஆப்கான் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த ஆப்கான் மக்களுக்கு, இது ‘நம்ம ஆட்சி’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தத் தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும்.

நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு சென்று, கடந்த 20ஆம் ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கான் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது.

ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம். அப்பாவி ஆப்கான் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது.

“விடுதலைப்புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பிருக்கவில்லை” என்று இன்று தலிபான் பேச்சாளர் கூறுவது, இலங்கையில் ஒரு ‘ஒருநாள் செய்தி’. இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்தவில்லை.

கடந்த இடைக்கால தலிபான் ஆட்சியில், ‘பாமியன்’ உலக பெளத்த மரபுரிமை சின்னங்கள் குண்டால் தகர்க்கப்பட்டமை உண்மைதானே..!

இதுபோன்ற ஆவேச முட்டாள்தனங்களைச் செய்யாமல் ஆப்கான் மக்களின் உடனடித் தேவையான ‘நிம்மதி’யை பெற்றுத்தரும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சூழலை ஏற்படுத்தத் தலிபான்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமது மக்களை நேசிக்கும் பொறுப்புள்ள ஆட்சியாளராக தம்மை மாற்றிக்கொள்வதும், காட்டுவதும்தான், ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வல்லரசுகளுக்கு தலிபான்கள் தரக்கூடிய ‘செருப்படி’ ஆகும்” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.