நான் அங்கு செல்லும் வரை எனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என அறிந்திருக்கவில்லை.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், நேற்றைய தினம் சுகாதார அமைச்சுக்குச் சென்ற முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி, அங்கிருந்தவர்களுக்கு நன்றிகூறி, விடைபெற்றார்.

அங்கிருத்தவர்களுடன் உரையாடிய போது , எதிர்பாராத தருணத்தில் மாற்றம் செய்யப்பட்டு எனக்கு இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது, நான் அங்கு செல்லும் வரை எனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என அறிந்திருக்கவில்லை. வாழ்க்கையில் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

பின்னர் குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.

அக்கதையானது,

“ அரசனும் அவனது ஆலோசகரும் காட்டுவழியாக பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அரசன் எய்த மூன்று அம்புகள் குறி தவறிவிட்டன. அதன்போது, என்றுமில்லாத வகையில் குறி தவறிவிட்டனவே ஏன்? எனக் அரசன் கேட்கையில், எல்லாம் நன்மைக்கே என? ஆலோசகர் பதிலளித்துள்ளார். பயணமும் தொடர்ந்தது. அப்போது அரசன், தன்னுடைய வாளை உருவியுள்ளார்.

அந்த வாள், அரசனின் கையின் சிறுவிரலில் பட்டுள்ளது. அதனால், அவ்விரலில் ஒருதுண்டு கீழே விழுந்துவிட்டது. இதுபற்றியும் ஆலோசகரிடம் அரசன் வினவியுள்ளார். அப்போதும் எல்லாம் நன்மைக்கே என, ஆலோசகர் பதிலளித்துள்ளார்.

அதனால் கடுமையாக கோபம் கொண்ட அரசன், அந்த ஆலோசகரை, அங்கிருந்த பாரிய குழிக்குள் தள்ளிவிட்டு, தனது பயணப்பாதையை மாற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.

அவ்வாறு போய்கொண்டிருந்தபோது நரபலி பூஜை செய்வதற்காக ஒருவரை அந்த காட்டில் இருந்தவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.

அரசனோ, அவர்களிடம் வசமாகக் மாட்டிக்கொண்டார். அரசனை முழுமையாக நீராட்டி எடுத்து வந்தவர்கள், அங்கங்களை பரிசோதனை செய்துள்ளனர். பலி பூஜைக்கு முழுமையாக உடலமைப்பை கொண்டவர்களை மட்டுமே பயன்படுத்துவர். ஊனம் உள்ளவரை பலியெடுக்க மாட்டார்கள்.

அரசனின் விரல்களில் ஒரு துண்டு இன்மையால், பலி பூஜைக்கு அரசனை பயன்படுத்தாது விட்டுவிட்டனர். இதுதொடர்பில், அங்கிருந்தவர்களிடம் அரசன் விசாரித்துள்ளார்.

ஊனம் உள்ளவர்களை பலியெடுக்கமாட்டோம் என விளக்கமளித்துள்ளனர்.

அப்போதுதான், எல்லாம் நன்மைக்கே என ஆலோகர் கூறியது அரசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதன்பின்னர், அந்த குழியைத் தேடிச்சென்று, அதிலிருந்து ஆலோசகரை மீட்டெடுத்தார் அரசன்.

குழியிலிருந்து வெளியே வந்த ஆலோசகர், என்னை குழிக்குள் நீங்கள் தள்ளியதும் நன்மைக்கே என்றார். அரசனோ ஏன்? என வினவியுள்ளார். நானும் உங்களுடன் வந்திருந்தால், அந்த பலி பூஜையில் உங்களுக்கு அடுத்தப்படியாக என்னை பலியெடுத்திருப்பார்கள், நான் தப்பிக்கொண்டேன் என ஆலோசகர் விளக்கப்படுத்தியுள்ளார் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கதையை முடித்தார்.

எனவே, தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவி மாற்றமும் நன்மைக்கே எனக் கூறி சிரித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆனால் மனதில் சிறிய கவலையுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.