தொற்று, மரணங்களின் எண்ணிக்கையே ஊரடங்கின் தளர்வதைத் தீர்மானிக்கும்.ரமேஷ் பத்திரண தெரிவிப்பு.

“கொரோனா வைரஸ் தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாளாந்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல்படுத்துவதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும்.”

இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் பெருந்தோட்டத்துதுறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பலப்பிடிய வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா வைரஸ் தாக்கத்தை ‘பெருந்தொற்று’ என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. மருத்துவத்துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளால்கூட வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. ஆகவே, கொரோனாத் தொற்றை சாதாரண நோயென ஒருபோதும் கருத முடியாது. அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

கொரோனா தாக்கத்தைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் தரப்பினரது ஆலோசனைகளுக்கமையவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையாக்கப்படும். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுப்பது அவசியமாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.