காணாமல்போனோருக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை கட்டாயம் தேவை! – சிவாஜிலிங்கம் வலியுறுத்து.

“சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க முடியும். அதனைப் பெறுவதற்கு நாங்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

இன்று உலக காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அதையொட்டி அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இதுவரை தமிழ்த் தரப்பில் இருந்து கட்டாயமாகக் காணாமல் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் என ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வடக்கு, கிழக்கின் பல இடங்களிலே 600 பேருக்கு மேற்பட்டோர் காணாமல்போயிருக்கின்றார்கள்.

1996ஆம் ஆண்டில் காணாமல்போனோர் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகின்ற சூழ்நிலையிலேதான் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் சுமார் 6 ஆயிரத்து 500 பேரை இராணுவத்தினரிடம் அவர்களது மனைவிமாரோ, பெற்றோரோ, சகோதரர்களோ கையளித்தவர்களைப் பற்றி கூட இன்னும் எந்தவிதமான தகவல்களும் இல்லை.

இந்தச் சூழ்நிலையின் பின்தான் இவர்களைக் கண்டுபிடிக்க எத்தனை குழுக்களை நியமித்து இருந்தாலும் அதிலிருந்து அரச தரப்பினர் பின்வாங்கினார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே 30/1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசு சொன்னாலும் அதன் பிறகு அவர்கள் பின்வாங்கினார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளைத் தேடி வருடக் கணக்கில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஏறக்குறைய 2 ஆயிரம் நாட்கள் வீதிகளில் இருந்து போராடி வருகிறார்கள்.

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும். அதனைப் பெறுவதற்கு நாங்கள் முனைப்புக்காட்ட வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளை நிறுத்தாத வரை இதற்கான நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இல்லாவிட்டாலும் கூட அதை நோக்கிப் பயணிக்கின்ற விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.