தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வண்டலூர், ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான ஓராண்டு பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பேசுகையில், காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை. இந்த இரண்டும் முறையாக, சரியாகச் செயல்பட்டால் அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாக பெயர்பெறும். காவல்துறையில் எத்தனையோ உயர் பதவிகள் இருந்தாலும், மக்களோடு நேரடியாக தொடர்புகொள்ளக் கூடியவர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள்தான். எனவே மிக மிக முக்கியமான கடமையும், பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது.

காவல் துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும். என்னுடைய இந்த ஆசை, உங்கள் ஆசையாகவும் மாற வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் அமைதியை உருவாக்கித் தரும் மாபெரும் கடமை காவல் துறைக்குத்தான் இருக்கிறது.

உடல் உறுதி, மனபலம், அறிவுத்திறன், விடாமுயற்சி ஆகிய இந்தக் குணங்களை நீங்கள் எந்தச் சூழலிலும் கைவிட்டுவிடக் கூடாது. கடுமையாக இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அறிவு அனைவருக்கும் வேண்டும். பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் 941 பேரில் 280 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியது. ஆணும் பெண்ணும் சமமானவர்களாக மட்டுமல்ல, ஆணைவிட பெண்கள் உயர்வானவர்களாகச் செயல்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார்.

காவல்துறையில் உங்களைப் போன்ற பெண் வீராங்கனைகள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். உங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியை குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.

சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்களை திருத்த முயற்சி செய்யுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.