ஆப்கான் போருக்குள் உண்மை முகத்தை தேடல் : சண் தவராஜா

ஆப்கானை விட்டு அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ளன.

வெளியேற்றத்துக்கான நாளாக ஆகஸ்ட் 31 நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், 30 ஆம் திகதி நள்ளிரவிலேயே அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியிருந்தன.

இறுதியாக வெளியேறிய மூன்று விமானங்களில் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொஸ் வில்சன், அமெரிக்கப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்தோபர் டொனஹூ ஆகியோரும் பயணமாயினர்.

Major General Chris Donahue Left Afghanistan

அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் இணைந்து இதுவரை 123,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது போன்றதொரு அந்நியப் படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தானில் 1989 பெப்ரவரி 15 இல் நிகழ்ந்தது.

சோவியத் படைகளின் தளபதியாக விளங்கிய ஜெனரல் போரிஸ் வி.குரோமோவ் தலைமையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் வெளியேறினர். ஆனால், இந்த வெளியேற்றம் – அமெரிக்கா வெளியேறியதைப் போன்று – அவசரகதியில் நடைபெறவில்லை. மாறாக, 9 மாதங்கள் நீடித்தது. இறுதியாக வெளியேறிய ஜெனரல் குரோமோவ் ஊடகவியலாளர்களிடம் தகவல் தருகையில் “எங்கள் படையினரில் ஒருவர் கூட மீதமில்லாமல் வெளியேறி உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அமெரிக்கத் தரப்பில் இறுதியாக வெளியேறிய மேஜர் ஜெனரல் கிறிஸ்தோபர் டொனஹூ அவர்களால் அத்தகைய ஒரு கூற்றை வெளியிட முடிந்திருக்கவில்லை.

அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியதைத் தொடர்ந்து காபுல் விமான நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலீபான்கள், வானத்தை நோக்கித் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டமை தொடர்பில் சர்வதேச அடிப்படையில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்த அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டதாகவும், எதிர்காலத்தில் அதுபோன்ற பாரிய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். “எமது வெளிவிகாரக் கொள்கைகளைப் பொறுத்தளவில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எமது நாடு சென்ற பாதையின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் பைடன்.

கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருத்து பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்றோன் அவர்களிடமிருந்தும் வெளிப்பட்டுள்ளது. ‘வெளிநாட்டுத் தலையீடு என்பது ஒரு இறைமையுள்ள அரசாங்கத்தின் விருப்போடு இணைந்ததாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு நாட்டின் அரசாங்கத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக அது அமையக் கூடாது” என்கிறார் அவர்.

Russian Foreign Minister Sergey Lavrov

இந்த இரண்டு வல்லரசுத் தலைவர்களின் கருத்தையும் வரவேற்றுள்ள ரஸ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கை லவ்ரோவ், “ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு, மேற்குலகப் பாணியிலான ஜனநாயகத்தை அந்த நாடுகள் மீது திணிக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய காலம் உருவாகி விட்டது என்ற கருத்தை இந்த இருவரும் இரண்டு நாள் இடைவெளியில் கூறியிருக்கின்றார்கள். இந்தத் தருணம் மிகவும் சுவாரஸ்யமானது” என்கிறார் அவர். “இத்தகைய அறிவிப்புகளை நாம் வரவேற்கிறோம்.

அண்மைய பத்தாண்டுகளில் மேற்குலகின் தலையீடு காரணமாக உருவாகியுள்ள சூழல் தொடர்பில் பாடங்களைக் கற்றுக் கொள்ளுமாறு நாம் தொடர்ச்சியாக மேற்குலக நண்பர்களைக் கோரி வந்திருக்கிறோம். கடுமையான முடிவுகளின் வெளிப்பாடாகவே இத்தகைய அறிவிப்புகள் வெளியாகின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இதன் விளைவாக எதிர்காலத்தில் எமது பூமியில்; ஓரளவு அமைதி நிலவும் என நான் எதிர்பார்க்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவராக விளங்கும் யோசப் பொறல், “அமெரிக்காவின் முடிவுகளில் தங்கியிருப்பதை ஐரோப்பிய நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது” என்கிறார்.

சேர்கை லவ்ரோவ் அவர்களின் கருத்துக்களை இராஜதந்திரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால், அமெரிக்காவின் கடந்தகால வரலாறு எம்மை அவநம்பிக்கை கொள்ளவே செய்கிறது.

வரலாற்றில் இருந்து பாடம் கற்றல் மிகவும் அவசியமானது. அது அமெரிக்காவுக்கோ, மேற்குலகுக்கோ மாத்திரம் பிரத்தியேகமானது மட்டுமல்ல, அனைவருக்குமே உரித்தானது. ஆப்கானிஸ்தான் விடயத்தில் உண்மையிலேயே அமெரிக்கா பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றதா அல்லது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எழும் விமர்சனங்களைச் சமாளித்து விடுவதற்காக ஜோ பைடன் இவ்வாறு கூறுகின்றாரா என்பதை எதிர்காலமே எமக்கு உணர்த்தும்.

ஆனால், வெளிப்படையாக இவ்வாறு கூறியே ஆக வேண்டிய ஒரு நிலைக்கு அமெரிக்கா நிர்ப்பந்தப் படுத்தப்பட்டிருக்கின்றது என்றால் அதற்காக அந்த நாடும், நாட்டு மக்களும் செலுத்திய விலை அதிகமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பொருளாதார அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் மாத்திரம் 2 ட்ரில்லியன் டொலரை அமெரிக்கா செலவிட்டுள்ளது என்றால் போரில் 2,400க்கு மேற்பட்ட அமெரிக்கப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். 20,000 வரையான அமெரிக்கப் படையினர் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களுள் அவயவங்களை இழந்தவர்களும் அடக்கம். இவர்களைப் பராமரிப்பதற்கு மேலும் ஒரு ட்ரில்லியன் டொலர் அடுத்த பத்தாண்டுகளுக்குச் செலவிடப்பட வேண்டியுள்ளாதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2001 செப்டெம்பர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட படை நடவடிக்கைகளுக்காக 5.8 ட்ரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதேவேளை, போரில் காயமடைந்தோருக்கான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக 2050ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2.2 ட்ரில்லியன் டொலர்கள் வரை செலவிடப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

போர்களில் பங்குபெற்ற அமெரிக்கப் படையினர் மத்தியில் நிலவும் உளச் சிக்கல்கள், அதிகரித்துவரும் தற்கொலைகள் போன்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவை. முன்னாள் படைவீரர்கள் மத்தியில் தினமும் 20 முதல் 22 வரையான தற்கொலைகள் நிகழ்வதாக உத்தியோகபூர்வமற்ற செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளப் போதுமானது.

மேலும், ஆப்கானிஸ்தான் போரில் பங்கு கொண்ட அமெரிக்க ஒப்பந்தப் படையினர் 3.800 பேர் இறந்துள்ளனர். நேட்டோ படையணியில் இருந்த 1,100 படையினரும் இறந்துள்ளனர்.

மறுபுறம், மேற்குலகப் படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கானிய படையினர், காவல்துறையினர் என 64,000 பேர் போரில் மாண்டுள்ளனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிந்திய காலகட்டத்தில் இதுவரை 47,000 பேர் இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது ஆயுத மோதல்கள் ஓய்ந்துவிட்டாலும், மோதல்களின் போது கைவிடப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களின் விளைவான மரணங்கள் முடிவுக்கு வந்துவிடவில்லை. குறிப்பாக சிறார்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது இரட்டிப்பு வேதனை தரும் செய்தியாக உள்ளது.

அமெரிக்கப் படையெடுப்பின் விளைவாக 5.9 மில்லியன் மக்கள் ஒன்றில் இடம்பெயர்ந்து உள்ளார்கள் அல்லது அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளார்கள். கடந்த யூலை மாதத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் 395,800 பேர் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உள்ளிட்ட அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தவிர அநேகமானோர் ஐரோப்பாவை நோக்கி புகலிடம் தேடி வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளிடையே பதட்டம் உருவாகியுள்ளமை தெரிந்ததே.

தலீபான்களைப் பலவீனப்படுத்தும் எண்ணத்துடன் ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய அமெரிக்கப் படைகள், தங்கள் முயற்சியில் வெற்றி பெறாமல் போனமை ஒருபுறம் இருக்க, துரிதகதியில் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களைக் கைவிட்டுச் சென்றுள்ளமை ஒரு முரண்நகையே. அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் காரணமாக தலீபான்கள் வசம் கிட்டிய ஆயுத தளபாடங்களின் பெறுமதி 85 பில்லியன் டொலர் என்கிறார் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரான ஜிம் பாங்ஸ். அவரது தகவல்களின் பிரகாரம் தலீபான்கள் வசம் 85,000 வாகனங்களும், 200 வரையான விமானங்களும், உலங்கு வானூர்திகளும் கிட்டியுள்ளன. அத்துடன் 600,000 துப்பாக்கிகள், சிறிய ரக ஆயுதங்கள், இரவுக் கண்காணிப்புக் கருவிகள், குண்டு துளைக்காத ஆடைகள் என்பனவற்றையும் தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
தலீபான்கள் வசம் உள்ள ‘பிளக் ஹோக்’ வகை உலங்கு வானூர்திகள் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் உள்ளிட்ட உலகின் 85 நாடுகளை விடவும் அதிகம் என்கிறார் அவர்.

இப்போது வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டிய நிலையில் இருப்பது அமெரிக்கா மட்டுமல்ல தலீபான்களுமே என்பது நோக்கர்களின் கருத்து. தலீபான்கள் கற்றுக்கொள்ள உள்ள அல்லது கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பது அந்த நாட்டு மக்களின் ஒட்டுமொத்த சுதந்திரத்தைப் பேணுவதாகவும், பெண்கள் உட்பட அனைவருக்கும் நன்மை பயப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பு. மாற்றத்துக்கான சமிக்ஞைகள் அண்மைக் காலமாக தலீபான்களிடம் இருந்து வெளிப்பட்டு இருந்தாலும் அதன் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட இன்னமும் காத்திருக்க வேண்டும் என்பதே நடைமுறை யதார்த்தமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.