சுகாதாரத்தரப்பினரின் பாதுகாப்பை உறுதிசெய்க; இல்லையேல் மக்களைக் காப்பாற்றவே முடியாது

சுகாதாரத்தரப்பினரின் பாதுகாப்பை உறுதிசெய்க;
இல்லையேல் மக்களைக் காப்பாற்றவே முடியாது!

உதயகுமார் எம்.பி. சுட்டிக்காட்டு

“நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பது சுகாதாரத் தரப்பினரே. எனவே, அவர்களை முதலில் பாதுகாக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியாது.”

– இவ்வாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு வைத்திய மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல வல்லரசு நாடுகள்கூட பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தப் பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அந்தவகையில் இலங்கை முதலாவது கொரோனாத் தொற்று அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டது. இரண்டாவது அலையில் சிறிய அளவு பாதிப்புக்கள் ஏற்பட்டன. ஆனால், மூன்றாவது அலை கடுமையான பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது. பல உயிர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. சுகாதாரத் தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் பல எச்சரிக்கைகளை விடுத்தார்கள். இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பல நடைமுறைகளையும் பின்பற்றுமாறு கூறினார்கள். குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் அறிக்கையொன்றைக் கூட வெளியிட்டிருந்தனர்.

இதில் பல்வேறு விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் நாட்டை முடக்குதல், போக்குவரத்துத் தடையை ஏற்படுத்துதல், சுகாதாரத் தரப்பினரைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இன்று சுகாதாரத் தரப்பினர் செய்கின்ற சேவைகளை நாம் வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. சர்வதேச பரிந்துரைகளை அமுல்படுத்தியிருந்தால் இன்று சுகாதாரத் தரப்பினரைக் காப்பாற்றியிருக்கலாம்.

காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாகத்தான் நாம் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம். மூன்றாவது தடைவையாக வந்த இந்தக் கொரோனா அலை எம்மைப் பாரியளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

டிக்கோயா வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வேண்டும் என என்னிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய நான் ஒரு சில உபகரணங்களை இன்று பெற்றுக்கொடுத்துள்ளேன். எனது சொந்த நிதியிலிருந்தும் மேலும் சில உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கவுள்ளேன்.

அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஒரு சில உபகரணங்களை இந்த மாத இறுதிக்குள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கும், மஸ்கெலியா வைத்தியசாலைக்கும் பெற்றுக்கொடுக்கவுள்ளார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.