கப்ராலுக்கு அமைச்சருக்கு ஒப்பான சிறப்புரிமைகளை வழங்க முடியாது!

“இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ராலுக்கு, அமைச்சருக்கு ஒப்பான சிறப்புரிமைகளை வழங்க முடியாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்க வேண்டுமாயின், அமைச்சருக்கான அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளை தனக்கு அளிக்க வேண்டும் என்று அஜித் நிவாட் கப்ரால் கோரியிருந்ததார் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி., கப்ராலின் கோரிக்கையை நிராகரித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கப்ராலுக்கு மேலதிக அதிகாரங்கள் இல்லை. அது பிழையான கருத்து. மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சர் ஒருவரது அதிகாரங்களுக்குச் சமமான அதிகாரங்களை எவ்வாறு வழங்க முடியும்? அமைச்சரவை என்பது ஜனாதிபதியுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரங்களை அமுல் செய்கின்றது.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநருக்கு அவ்வாறான நிறைவேற்று அதிகாரங்கள் கொடுக்கப்பட மாட்டாது. பணியாளர்கள் குழு போன்ற விடயங்களை அவர் கேட்டிருந்தால் அதில் பிழையில்லை. நாட்டுக்கு மிகப்பெரிய கடமையை அவர் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.

கப்ராலின் நியமனக் கடிதத்துக்கமைய அவருக்கு ஓய்வூதிய உரிமையும் உள்ளது. அவர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஓய்வூதியம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை அர்ப்பணித்து மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்கத் தயாராகின்ற சந்தர்ப்பத்தில் இதுபோன்ற பிரசாரங்களை மேற்கொண்டிருப்பதன் பின்னணியில் ஏதோவொரு சூழ்ச்சி இருக்கின்றது என்பதே எமது கருத்து” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.