தேசிய வளங்களை விற்று வாழ்வதற்கு முயற்சிக்காதீர் அரசுக்கு எதிராக சஜித் அணி கண்டனம்.

அரசு, தேசிய வளங்களை விற்று வாழ்வதற்கு முயற்சிப்பது முற்றிலும் தவறான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“விசேடமாக செலந்திவா நிறுவனத்தினூடாக நாட்டின் தேசிய சொத்துக்களைச் சட்டபூர்வமாக விற்பனை செய்வதற்கு அரசு முயற்சித்து வருகின்றது.

குறிப்பாக கொழும்பு நகரின் முக்கிய இடங்கள், சொத்துக்கள் என்பற்றைக் குறித்த நிறுவனத்தினூடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், அரசு தற்போது புதிதாக துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இருக்கும் அரசின் 13 ஏக்கர் நிலப்பரப்பை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நினைத்தும் பார்க்க முடியவில்லை.

சீன நிறுவனமொன்று கொழும்புத் துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பைத் தருமாறு அரசிடம் கோரியுள்ளது. எதற்காக இந்த நிலப்பரப்பை விற்பனை செய்கின்றனர்? இவை நாட்டின் தேசிய வளங்களாகும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆணிவேராக இருக்கின்ற துறைமுகம், விமான நிலையம் போன்ற இடங்களை விற்பனை செய்வதனூடாக எவ்வாறான வியாபாரத்தை முன்னெடுப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது?

அரசிடம் பணம் இல்லையாயின் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகளைக் கையாள வேண்டும்.

அரசு டொலரைப் பெற்றுக்கொள்வதற்காகத் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பிலுள்ள 13 ஏக்கர் நிலப்பரப்பை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்வதற்கு எடுக்கும் முயற்சிக்கு நாம் முழுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

இதற்கு துறைமுக அதிகார சபை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

தேசிய ரீதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவருமே இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான எதிர்ப்புகள் இருக்கும்போது இந்த விற்பனை நடவடிக்கையை முற்றாக நிறுத்துமாறே நாம் அரசைக் கோருகின்றோம்.

துறைமுக இடத்தை மட்டுமல்ல கொழும்பு நகரிலுள்ள முக்கிய இடங்களை விற்பனை செய்வதையும் உடன் நிறுத்துமாறு கோருகின்றோம்.

இந்த விற்பனைகளின் மூலம் இறுதியில் என்ன நடக்கப்போகின்றது. எமது நாட்டிலுள்ள சகல தேசிய வளங்களும் இல்லாமல் போகும். தேசிய வளங்களை விற்று வாழ்வதற்கு முயற்சிப்பது முற்றிலும் தவறான விடயமாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.