லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையினால் தமிழ் அரசியல் கைதிகள் உளரீதியாக பாதிப்பு.

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றையதினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய தினம் குறித்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரக்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் மேற்கொண்ட சம்பவத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவிட்டர் பதிவினூடாக வெளிக்கொணர்ந்ததை அடுத்து பல்வேறு தரப்புக்களிலுமிருந்தும் அரசாங்கத்திற்கு எழுந்த அழுத்தத்தினைத் தொடர்ந்து சிறைச்சாலை அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து தங்களுடைய உறவுகளின் பாதுகாப்பு குறித்து அச்சமைடைந்துள்ள அரசியல் கைதிகளின் உறவுகள் அவர்களை சென்று பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டதன் பிரகாரம் இரண்டாவது முறையாகவும் அவர்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாகவும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்னணியின் தலைவர் செயலாளர் சட்டத்தரணிகள் கடந்த 16ம் திகதி அன்று சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்….

குறித்த அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர் பதவி விலகுவது மட்டுமல்லாமல் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் கைதிகளுடைய வழக்குகள் இழுபறிகளின்றி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு விசாரணைக்காலம் வரை அவர்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.