காது கேளாதவர் என்று வேலை கொடுக்காமல் நிராகரித்த இளைஞர் UPSC தேர்வில் சாதனை!

காது கேளாதவர் என்ற குறைபாட்டை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் வேலை கொடுக்காமல் நிராகரித்த நிலையில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் முயற்சித்ததால் தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாக கோவையை சேர்ந்த மாற்றுதிறனாளி ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் 750 வது இடத்தை பெற்றுள்ள ரஞ்சித் குறித்த ஒரு தொகுப்பை இப்போது காணலாம்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் – அமிர்தவள்ளி தம்பதியின் இரண்டாவது மகன் ரஞ்சித். பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உடைய இவர் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்து 12 ம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து 2016 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்து பாராட்டிய நிலையில் , பின்னர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தார். இதனை தொடர்ந்து UPSC தேர்வு எழுதிய நிலையில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்றுள்ளார்.

மாற்று திறனாளியான ரஞ்சித் UPSC தேர்வில் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“லிப் ரீடிங்” முறையில் உதட்டு அசைவுகளை வைத்தே பிறர் பேசுவதற்கு பதில் அளித்து வரும் ரஞ்சித்,UPSC தேர்வினை தமிழில் எழுதியதாகவும், மொழி தனக்கு எங்கும் ஒரு தடையாக இல்லை எனவும் தெரிவித்தார்.

பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது “காம்பஸ் இன்டர்வியூ”வில் செவிகுறைபாட்டை காரணம் காட்டி வேலைக்கு எடுக்காமல் நிராகரித்தாகவும், என்னுடைய திறமையை காட்ட முடியும் என கூறியும் நிராகரித்தால் எப்படியும் என்னால் சாதிக்க முடியும் என்பதை நிருபிக்க தொடர்ந்து முயன்று தற்போது UPSC தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என கூறும் ரஞ்சித், மாற்றுதிறனாளியான தன்னை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரஞ்சித் கூறினார்.

காது கேளாத குறைபாடுடன் இருந்த மகன் கல்விக்காவே ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்து ஸ்பெசல் பி.எட் படித்து காதுகேளாதோர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கும் ரஞ்சித்தின் தாயார் அமிர்தவள்ளி, முதலில் குரூப் 1 தேர்வு எழுதிய போது, அதில் காது கேளாதோருக்கு ஒதுக்கீடு இல்லை என ரஞ்சித் நிராகரிக்கப்பட்டதாகவும் அதன் பின்பு இரண்டு வருடமாக தேர்வுக்கு தயாராகி தற்போது வெற்றி பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.

கொரொனா காரணமாக சென்னை தனியார் ஐ.ஏ.எஸ் அகடமியில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அதில் படிக்க ரஞ்சித் மிகவும் சிரம்ப்பட்ட நிலையில், பி.எஸ்.ஜி கல்லூரி தமிழ் ஆசிரியர் பாரதி உதவியதாகவும்,தங்கள் மகனுக்கு ஏதாவது ஒரு சிறிய அரசு பணி கிடைக்கும் என்றுதான் நினைத்தாகவும் ஆனால் அவர் upsc தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சாதிக்க வேண்டும் என்ற வெறியும், நேரத்தை வீணாக்காமல் புத்தகம் படிக்கும் பழக்கமும் ரஞ்சித் வெற்றி பெற உதவியதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது முயற்சியிலேயே ரஞ்சித் upsc தேர்வில் வெற்றி பெற்று பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். மாற்று திறனாளிகள் தங்களுக்கு என தனியாக உலகத்தை சுருக்கி கொள்ள கூடாது எனவும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தெரிவிக்கும் ரஞ்சித், ஏழை எளியோருக்கும் மாற்று திறனாளுக்கும் பயனளிக்கும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கின்றார். மாற்று திறனாளிகள் மட்டுமன்றி upsc கனவுகளுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார் ரஞ்சித்..

Leave A Reply

Your email address will not be published.