அளுத்தகம முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்திய தாக்குதல் ஓர் ஈனத்தனமான செயலாகும் : கணேஸ்வரன் வேலாயுதம்

அளுத்தகம மாற்று வலுவாளரான முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்திய தாக்குதலில் பொலிஸாரும் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவாகி உலாவருதையிட்டு தான் பெரும் கவலையடைவதுடன் இதுவொரு ஈனத்தனமான செயலாகும் இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , மே மாதம் 25 ஆம் திகதி இந்தச் சம்பவம் குறித்த சி சி டிவி காணொளியொன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலான தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காணரமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. பின்னர் அவர் வைத்தியசாலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாக அலி சாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் தர்கா நகர் தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக நாமல் ராஜபக்ஸ தம் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுக்கம் நிலைநாட்டும் பொலிஸாரால் மனித நேயமும் பொறுமையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும். பொலிஸாரும் மனித நேயத்தையும் பொறுமையையும் மீறி வன்முறையாளர்களாக செயற்படுவார்களானால் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் இன்று மனித நேயம் ஒன்று இல்லாத நாடாக மாறிவிடும்.

எனவே எமது பொலிஸார் அதிக வன்முறையாளராகக் காட்டப்படும் செயற்பாடுகளுடன் மேலோங்குவதற்கு இடமளிக்காமல் சம்மந்தப்பட்ட பொலிஸாருக்கு விசாரணையினை மேற் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மிக அவசியமாகும்.

மனிதனைப் பாதுகாப்பதும் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதும் பொலிஸாரின் சிறந்த பண்பாடுகளாகும். எனினும் பொலிஸார் அக்கட்டுப்பாட்டை மீறி குறித்த அவ்விளைஞர் மீது ஓர் ஈனத்தமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய செயற்பாடுகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

– இக்பால் அலி

Comments are closed.