மம்தா முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் மே.வங்க சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்த போதிலும் நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

எனினும் முதல்வராக பதவியேற்றார். ஆறு மாதததிற்குள் மேற்கு வங்கத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்ற சட்டசிக்கல் எழுந்தது.

இதையடுத்து, மம்தா போட்டியிட வசதியாக பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்த சோபன் தேவ் தன் பதவியை ராஜினாமா செய்தார். பவானிப்பூர் உட்பட காலியாக இருந்த 3 தொகுதிகளுக்கு செப்.,30ல் தேர்தல் நடந்தது. மம்தாவை எதிர்த்து பா.ஜ.,வின் பிரியங்கா திப்ரேவால் களமிறங்கினார். காங்கிரஸ் போட்டியிடவில்லை. தேர்தலில் 53 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே, மம்தா பானர்ஜி முன்னிலை வகித்தார். இறுதியில் அவர் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் முதல்வர் பதவியை மம்தா தக்க வைத்து கொண்டார். மம்தா வெற்றியை அறிந்த திரிணமுல் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, “இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.

பவானிபூர் தொகுதியில் 58 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

மேலும், நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு எங்களை அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது.

நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்பட்டது. எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

Leave A Reply

Your email address will not be published.