எந்தவொரு சதியாலும் அரசைக் கவிழ்க்க முடியாது! – பங்காளிகளுக்கு பஸில் பதிலடி.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு நிலையான அரசு. இந்த அரசை எந்தவொரு சூழ்ச்சியாலும் கவிழ்க்க முடியாது. அரசுக்குள் எவரும் இருக்கலாம்; எவரும் வெளியேறலாம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு ‘மொட்டு ‘கூட்டணி அரசிலுள்ள பங்காளிக் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசுக்கு எதிராகப் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அமைச்சர் பஸில் ராஜபக்ச ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அரசில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமிருக்கின்றது. எவரும் அரசை வாழ்த்தலாம்; விமர்சிக்கலாம்.

ஆனால், அரசை வீழ்த்தலாம் என்று உள்ளேயும் வெளியேயும் யாரும் சூழ்ச்சி வகுத்தால் அது ஒருபோதும் வெற்றியளிக்காது.

அரசுக்குள் எவரும் இருக்கலாம்; எவரும் வெளியேறலாம். எவரும் புதிதாக இணையலாம். எமது கதவு எப்போதும் திறந்திருக்கும்.

ஆனால், அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.