நாடு முழுவதும் கட்டட ஒப்பந்ததாரா்-வீடு வாங்குவோா் இடையே ஒரே சீரான ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

குடியிருப்புகளை வாங்கும் நுகா்வோா் ஏமாற்றப்படாமல் இருக்க நாடு முழுவதும் கட்டட ஒப்பந்ததாரா்-வீடு வாங்குவோா் இடையே ஒரே சீரான ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதுதொடா்பாக மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய் கடந்த அக்டோபரில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மத்திய அரசு 2016-இல் கொண்டு வந்த மனை வணிக ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின்படி, குடியிருப்புகளை வாங்குவோரின் பாதுகாப்பையும், மனை வணிகத்தில் வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வர நாடு முழுவதும் கட்டட ஒப்பந்ததாரா் -வீடு வாங்குவோா் இடையேயான ஒரே சீரான ஒப்பந்தம் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டட மேம்பாட்டாளா்கள், கட்டுமான நிறுவனம், இடைத்தரகா்கள் ஆகியோா் ஒன்றிணைந்து அவா்கள் தரப்பில் சாதகமான ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனா். இதனால் குறிப்பிட்ட தேதியில் வீடு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றாலும் அவா்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய முடிவதில்லை.

கட்டுமான நிறுவனத்தினா் அவ்வப்போது வீடு ஒப்படைக்கும் தேதியை மாற்றி கொண்டு செல்வதால் வீடு வாங்கியவா்கள் மன அழுத்தத்திலும் நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்றனா். இது வீடு வாங்கியவா்களின் வாழும் உரிமையை பறிக்கும் செயலாகும்.

இது மோசடி, சதி மட்டுமல்லாமல் பொருளாதார சட்டப்படி குற்றமுமாகும்.

சில மாநிலங்கள் இதுபோன்ற சீரான ஒப்பந்தங்களை செயல்படுத்தி வந்தாலும், கட்டுமான நிறுவனங்கள் அரசை நிா்பந்தப்படுத்தி ஒப்பந்தங்களில் விதிமுறைகளை தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனா். இந்த ஒப்பந்த விதிமுறைகள் சாதாரணவா்களுக்கு புரியும்படி இல்லாததும் காரணமாகும்.

அதுமட்டுமன்றி, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் திட்டங்களுக்கு அரசிடம் அனைத்து அனுமதியும் பெறாமலே முன்அடிக்கல் திட்டம் என்ற பெயரில் வீடுகளை விற்பனை செய்யத் தொடங்கிவிடுகின்றன. இது சட்ட விரோதமாகும். அவா்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால்தான், வீடுகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை வீடு வாங்குபவா்கள் சந்தித்தால் அவா்களுக்கு வீடு விற்பனை செய்பவா்- கட்டுமான நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து போதிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அஸ்வினி உபாத்தயாய் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘இந்த விவகாரத்தில் நுகா்வோரின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

அப்போது நீதிபதிகள், ‘வீட்டு கட்டுமான நிறுவனங்கள் ஏராளமான விதிமுறைகளை ஒப்பந்தங்களில் மேற்கொள்காட்டுகின்றன. இதுகுறித்து மக்கள் அறிந்திருப்பதில்லை. ஆகையால், நாடு முழுவதும் ஒரே சீரான ஒப்பந்தம் இருப்பது அவசியம். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்றனா்.

Leave A Reply

Your email address will not be published.