கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு – மத்திய அரசின் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

சீனாவில் முதன்முதலாக கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 4 லட்சத்து 49 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 35,666 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய- மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையில் இருப்பதால் இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் முதலில் கூறப்பட்டது. எனினும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன்படி பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், இது தொடர்பாக நெறிமுறைகளை உருவாக்கும்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. செப்டம்பர் 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நெறிமுறைகளை உருவாக்க அதிக காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆவணங்களை சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், இறப்பு சான்றிதழில் கொரோனாவால்தான் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை காரணம் காட்டி இழப்பீடு வழங்குவதை தவிர்க்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.