இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக நாமல் தெரிவு..

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்க்ஷ நேற்று (06) தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவர்ட்டு விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் இசுறு தொடங்கொடவும், உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டனர். இதனை விடவும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டியவும் உப செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் குறிப்பிடுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இந்நாட்டுடன் முறையான இராஜதந்திர உறவுகளை முதலில் ஏற்படுத்திக் கொண்ட ஐரோப்பிய நாடாகவும், நீண்டகாலம் பலமான உறவுகளைக் கொண்ட நாடாகவும் பிரான்ஸ் காணப்படுகிறது என்றார். காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் ஒப்பந்தத்தின் செயற்றிட்டத்துக்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்நாட்டுக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்க பிரான்ஸ் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்த சபாநாயகர், பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் அமைப்பு இந்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு உதவியிருப்பதாகக் கூறினார்.

இலங்கையும் பிரான்சும் நீண்டகாலத்துக்கு முன்னர் இருந்தே இரு தரப்பும் பலமான உறவுகளைப் பேணிவரும் நிலையில், இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவர்ட்டு, இந்த உறவுகளை எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசாரம் போன்ற அனைத்துத் துறைகளில் இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் காணப்படும் உறவுகளை இந்தச் சங்கத்தின் ஊடாக மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கூறினார். குறிப்பாக இந்நாட்டுக்கு அதிகமான பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.