இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை விநியோகித்த திமுக – சாலை மறியலில் இறங்கிய அதிமுக

இரவில் மின் இணைப்பு துண்டிக்க வைத்து கொல்லச்சேரி ஊராட்சியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் மூக்குத்தி கொடுத்ததாக அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 2 ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் கொல்லசேரி ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்க வைத்து வாக்காளர்களுக்கு இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக வந்த தகவலையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அதிமுகவினர் அங்கு சென்றனர்.

அதிமுகவினரை பார்த்ததும் திமுகவினர் அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த மூக்குத்திகளை அதிமுகவினர் பறிமுதல் செய்தனர். திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ.பழனி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்து விட்டார். பின்னர் இதுகுறித்து அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் பரிசு பொருட்கள் வழங்காமல் இருக்க அந்த பகுதி முழுவதும் அதிமுகவினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.