உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வாக்காளருக்கு கவரிங் நகையை பரிசாக கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக கொடுத்துள்ளார். அடகு வைக்க சென்றபோது அவை தங்கம் அல்ல, கவரிங் என்பதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (அக்டோபர் 12) எண்ணப்படவுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி ஒருசில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வேட்பாளர்கள் வழங்கினர்.

குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 2வது கட்ட தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.

நாணயங்களை அடகு வைக்க சென்றபோது, அவை தங்கம் அல்ல, கவரிங் என்று தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். முன்னரே கவரிங் நகையை கொடுத்தால் தெரிந்துவிடும் என்று வாக்குப்பதிவு நாளான்று பொதுமக்கள் வாக்களிக்க செல்லும்போது அவர் இந்த நாணயத்தை கொடுத்துள்ளார். இதனால் மறுதேர்தல் வைக்க வேண்டும் என்று மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.