பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் தாங்கள் தேடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பி ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டேவிட் அமேஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியலில் மிகவும் கனிவான, அழகான, மென்மையான மனிதர்களில் ஒருவர் டேவிட் அமேஸ். நாங்கள் இன்று ஒரு நல்ல பொது ஊழியர் ,மிகவும் பிரியமான நண்பர் மற்றும் சக சேவகரை இழந்துவிட்டோம்,” என்று கூறியுள்ளார்.

அவரது இறப்பு குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவேத் கூறுகையில், “டேவிட் ஒரு சிறந்த மனிதர், சிறந்த நண்பர், மற்றும் சிறந்த எம்.பி., தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர் கொல்லப்பட்டுள்ளார்,” என்று குறிப்பிட்டார். பிரிட்டன் நிதித்துறை செயலாளர் (சான்சலர்) ரிஷி சுனக், “வன்முறையின் மோசமான அம்சமே அது மனிதாபிமானமற்று இருப்பதுதான். அது உலகின் மகிழ்ச்சியைத் திருடுகிறது, நாம் மிகவும் விரும்புவதை நம்மிடமிருந்து பறிக்கிறது,” என்று கூறியுள்ளார். “இன்று அது ஒரு தந்தை, கணவர் மற்றும் மரியாதைக்குரிய சக மனிதரை பறித்து விட்டது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சர் டேவிட்டின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன,” என்று ரிஷி சுனக் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் செளத் எண்ட் கவுன்சிலர் ஜான் லேம்ப் இருந்துள்ளார்.

“எப்போதும் பிறருக்கு உதவக் கூடிய நிலையில் இருந்தார் டேவிட். குறிப்பாக, அகதிகளுக்காக உதவ எப்போதும் முயற்சி எடுத்து வந்தார். தான் நம்பும் ஒரு விஷயத்தில் எப்போதும் உள்ளப்பிடிப்பு மிக்கவராகவும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுபவராகவும் விளங்கினார் டேவிட்,” என்றார் ஜான் லேம்ப்.

“தொகுதிவாசிகளை அவர்கள் வசிக்கும் வெவ்வேறு பகுதிகளுக்கே நேரில் சென்று குறைகளை கேட்டறிவதை டேவிட் அமேஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இப்படியொரு தாக்குதலில் அவர் பலியாவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை,” என்றார்ஜான் லேம்ப்.

சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனைக்கு டேவிட் கொண்டு செல்லப்படவில்லை என்றும் சம்பவ பகுதியிலேயே அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.

2016இல் கொல்லப்பட்ட ஒரு எம்.பி.யின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜோ காக்ஸ் ஃபவுண்டேஷன், “‘டேவிட் கத்திக்குத்து சம்பவம் கொடூரமான செயல்,” என்று கூறியுள்ளது.

தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கேர் ஸ்டார்மெர், “‘டேவிட்டுக்கு நடந்த கொடூரமான மற்றும் துயரமான சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பம், ஊழியர்கள் மீதே எனது நினைவு இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

டேவிட் அமேஸின் மறைவுக்கு கட்சி வித்தியாசமின்றி பிரிட்டனில் உள்ள அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.