ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா ஆதரவாளர்களிடம் திருடர்கள் பணம் பறிப்பு !

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்ததையடுத்து இதற்காக பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வருவதை அறிந்த தொண்டர்கள் காலை முதலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியிலும், சசிகலாவின் திநகர் வீட்டின் முன்பு அ.தி.மு.க கொடிகளுடன் காத்திருந்தனர்.

இதற்காக, சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் சசிகலா இன்று காலை புறப்பட்டார். மெரினாவுக்கு அவர் காரில் புறப்பட்டதும் வாசலில் காத்திருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் – பத்மாவதி தாயார் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கிருந்து புறப்பட்டு மெரினா நோக்கி சென்றார். சாலையில் அதிமுக கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார். கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். எம். ஜி.ஆர், அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவித்தார்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா ஆதரவாளர்களிடம் திருடர்கள் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பணம், செல்போனை பறிகொடுத்த 20 பேர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, 20 பேரிடம் ரூ.93,000 பணம், 5 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.