விவசாயியை ஏமாற்றி திருமணம் செய்து நகை பணத்துடன் ஓட்டம் பிடித்த 5 பெண்கள் கைது!

விவசாயியை ஏமாற்றி திருமணம் செய்து நகை பணத்துடன் ஓட்டம் பிடித்த 5 பெண்கள் கைது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி தோட்டத்தில் வசித்து வந்தவர் மாரப்பன் மகன் ராஜேந்திரன்(34). இவர் தனது தாய், தந்தையுடன் தங்கி விவசாயம் செய்து வந்தார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிறுவலூரை சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்க சொல்லி உள்ளார் ராஜேந்திரன். அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் அம்பிகா என்ற பெண் திருமண தரகரிடம் அறிமுகம் செய்து வைத்தாராம்.

இந்த நிலையில் அம்பிகா அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். வள்ளியம்மாள் தன் வீட்டுக்கு ரீசா என்ற மணப்பெண் அவரது அக்கா தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகக் கூறி, ராஜேந்திரனை பெண் பார்க்க வரச்சொல்லி உள்ளார். பெண்ணை பார்த்த உடன் பிடித்து விட்டதால் ராஜேந்திரனுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ரீசாவை நிச்சயம் செய்துள்ளனர்.

உடனடியாக திருமணம் செய்து கொள் என வற்புறுத்தியதால், 24-ம் தேதி திருமணம் செய்துகொள்ள ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து 24-ம் தேதி காலை பச்சாம்பாளையம் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோயிலில் வைத்து ரீசாவை, ராஜேந்திரன் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்ததும் திருமண தரகு கமிஷனாக ரூபாய் 1லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 25-ம் தேதி ராஜேந்திரன் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த போது முழு அலங்காரங்களுடன் வெளியே வந்த ரீசா காரை வரவழைத்து வீட்டிலிருந்து ராஜேந்திரன் போட்டிருந்த நகைகளுடன் மாயமானார்.

இதையடுத்து ராஜேந்திரன் சந்திரன் மூலமாக அரியலூரை சேர்ந்த தரகர் வள்ளியம்மாளை தொடர்பு கொண்டபோது உரிய பதில் இல்லை. இதையடுத்து சந்திரன் அரியலூருக்கு சென்று விசாரித்தபோது, ரீசாவுக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரன் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி திருமணம் செய்த ரீசா(27), தரகர்கள் அம்பிகா(38), வள்ளியம்மாள்(45), ரீசாவின் உறவினர் தேவி(55) மற்றும் தங்கம்(36) ஆகியோர் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குபதிந்த போலீஸார், 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் வேறு எங்கும் இது போன்ற மோசடியில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.