வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. தீர்த்தமலை, டி.ஆண்டியூர், நரிப்பள்ளி, பொம்மிடி, பொ.துரிஞ்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போன்று, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கன்னிகாபுரம், சான்றோர்குப்பம், தேவலாபுரம், சாத்தம்பாக்கம், பெரியவரிகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், கோமல், மங்கைநல்லூர், செம்பனார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த மழையினால் சம்பா பயிர்களில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாத நிலையில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகர் பகுதிகளான நெல்லை சந்திப்பு, டவுண், பேட்டை, கொக்கிரகுளம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது,. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பெரியகுளம், சோத்துப்பாறை, கும்பக்கரை லோயர் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடலூர், சுருளி அருவி, கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.

கொடைக்கானல் பேருந்து நிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, பெருமாள் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது, மலைப்பாதையில் பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Leave A Reply

Your email address will not be published.