மான்செஸ்டா் யுனைடெட்டுக்கு 2-ஆவது வெற்றி.

சாம்பின்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 3-2 என்ற கோல் கணக்கில் அட்லான்டாவை தோற்கடித்தது.

குரூப் ‘எஃப்’-இல் இடம்பெற்றிருக்கும் இந்த இரு அணிகளுமே இத்துடன் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் மான்செஸ்டருக்கு இது 2-ஆவது வெற்றி, அட்லான்டாவுக்கு இது முதல் தோல்வி.

இங்கிலாந்தின் மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் அபாரம் காட்டியது அட்லான்டா. 15-ஆவது நிமிஷத்தில் ஸபாகோஸ்டா உதவியுடன் மேரியோ பசாலிச் அடித்த கோலில் அந்த அணி முன்னிலை பெற்றது. தொடா்ந்து 28-ஆவது நிமிஷத்தில் மெரி டெமிரால் அடித்த கோலால் அந்த அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆனது. இவ்வாறாக நிறைவடைந்த முதல் பாதியில் கோல் இன்றி பின்தங்கியிருந்தது மான்செஸ்டா்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அடுத்து நடைபெற்ற 2-ஆவது பாதியில் அந்த அணியின் ஆட்டம் தொடங்கியது. 53-ஆவது நிமிஷத்தில் புருனோ ஃபொ்னாண்டஸ் பாஸ் செய்த பந்தை கோல் போஸ்டுக்குள் விரட்டி மான்செஸ்டரின் கோல் கணக்கை தொடங்கினாா் மாா்கஸ் ராஷ்ஃபோா்டு. அதையடுத்து 75-ஆவது நிமிஷத்தில் சாஞ்சோ கா்லிங் கிக்காக உதைத்த பந்து எடிசன் கவானியிடம் வர, அவா் ஃப்ளிக் செய்த பந்தை ஹேரி மாகிரே வசப்படுத்தி கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

இதனால் ஆட்டத்தின் விறுவிறுப்பு கூட, இரு அணிகளுமே வெற்றிக்கான கோலுக்காக கடுமையாக முயற்சித்தன. இறுதியில் மான்செஸ்டருக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. 81-ஆவது நிமிஷத்தில் கோல்போஸ்டின் இடது பக்கத்திலிருந்து லூக் ஷா ஸ்விங் செய்து கிராஸ் வழங்கிய பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோலடித்தாா். எஞ்சிய நேரத்தில் அட்லான்டாவை கோலடிக்கவிடாத மான்செஸ்டா் யுனைடெட், இறுதியில் வெற்றியை சுவைத்தது.

இதர ஆட்டங்கள்: பாா்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் டைனமோ கீவையும், செல்சி 4-0 என்ற கோல் கணக்கில் மால்மோவையும் வீழ்த்தின.

டைனமோவுக்கு எதிரான ஆட்டத்தில் பாா்சிலோனா தரப்பில் ஜெராா்டு பிகே 36-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். மால்மோவுக்கு எதிராக செல்சி அணியில் ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் (9-ஆவது நிமிஷம்), ஜோா்கினோ (21 மற்றும் 57), காய் ஹாவொ்ட்ஸ் (48) ஆகியோா் கோலடித்தனா். ஜுவென்டஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெனித்தை வீழ்த்திய ஆட்டத்தில் ஜுவென்டஸுக்காக டெஜான் குலுசேவ்ஸ்கி (86) ஸ்கோா் செய்தாா்.

ஆா்.பி. சால்ஸ்பா்க் – வோல்ஃப்ஸ்பா்கையும் (3-1), பேயா்ன் முனீச் – பென்ஃபிகாவையும் (4-0), வில்லாரியல் – யங் பாய்ஸையும் (4-1) வெற்றி கண்டன. லில்லே – செவில்லா அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

Leave A Reply

Your email address will not be published.