நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸ் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து…

• தகுதியுடைய அனைத்து பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி ….

• மாகாணத்துக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பம்…

• மாகாணங்களுகிடையிலான புகையிரத போக்குவரத்துச் சேவை நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்…

• மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை 31ஆம் திகதிக்குப் பின்னர் நீக்குவதற்கு அவதானம்…

சுகாதாரம், பாதுகாப்பு, விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செலுத்த ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதேபோன்று, தகுதியுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி தகுதியுடைய அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் பாரிய அர்ப்பணிப்பின் மூலம் மிகவும் வேகமாக கொவிட் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க முடியுமாக இருந்தது.

அந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போதைய மரண எண்ணிக்கையை சூன்யமாக்குவதற்கும் மற்றும் நோயாளிகள் இனங்காணப்படும் பிரதேசங்கள் பற்றி கவனத்தை செலுத்தி நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றி ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இன்று (22) பிற்பகல் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் பாடசாலைகளில் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்களை ஆரம்பிப்பதற்கு கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்தது. பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை தொடர்பாகவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மாகாணங்களுக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுவதோடு புகையிரத பயணச் சீட்டை பெற்றுக்கொண்டுள்ள பயணிகள் மாத்திரம் முதலாம் கட்டத்தின் கீழ் பயணிக்க அனுமதி வழங்குவதற்கு கொவிட் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலதிக பெட்டிகளை ஒன்றிணைத்து அதிக நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

பொதுமக்களின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நவம்பர் 01ஆம் திகதி முதல் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டது. முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு பொதுமக்களை தொடர்ந்து தெளிவுபடுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டு ஔடதங்கள் மற்றும் கஞ்சி வகைகளை அருந்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.