பிரபல ஜவுளிக்கடைக்கு சீல்.. நகராட்சி அதிகாரிகளை தாக்க முயன்ற கடை உரிமையாளர்!!

மயிலாடுதுறையில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத பிரபல ஜவுளி கடைக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகராட்சி அதிகாரிகளை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து வணிக நிறுவனங்களிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை கடைத்தெருவில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை நடைபெற்று வருவதாக நகராட்சி அலுவர்களுக்கு புகார் வந்தது.

பிரபல கடைகளுக்கு அபராதம் – சீல்:

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி நகர் நல அலுவலர் மலர்மன்னன் தலைமையில் பல்வேறு கடைகளில் நகராட்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாத ஜி.ஆர்.டி நகைகடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திய சான்று இல்லாதது, முககவசம் அணியாதது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத திருப்பூர் காட்டன் என்ற ஜவுளி கடைக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.

சண்டை போட்ட கடை உரிமையாளர்:

இதையடுத்து அருகே உள்ள சீமாட்டி ஜவுளி கடைக்கு ஆய்வுக்கு சென்ற போது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றாததால் கடைக்கு சீல்வைக்க நகர் நல அலுவலர் மலர்மன்னன் உத்தரவிட்டார்.

இதனால் கடை உரிமையாளருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் கடைக்கு சீல் வைக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது கடை உரிமையாளரும், அவரது உறவினர்களும் நகர் நல அலுவலர் மலர்கண்ணனை தள்ளிவிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகராட்சி ஆணையர் பாலு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இன்று ஒருநாள் மட்டும் கடை மூடப்படும் என்றும் நாளை முதல் கொரோனா விதிமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடைக்கு தீபாவளி பண்டிகை வரை சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து சென்றனர்.

பிரபல ஜவுளி கடை என்றால் அபராதம் மட்டும் விதித்து விட்டு செல்வது, சிறிய கடை என்றால் சீல் வைக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.