நீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளோடு ஜாமீன் கிடைத்தும் ஆர்யன் கான் இன்னும் உள்ளே!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும் நீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளோடு 25 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்தும் ஆர்யன் கான் இன்னும் உள்ளே இருக்க வேண்டிய நிலை.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவருடன் மேலும் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது வரை, இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில், ஆர்யன் கானும் அவருடன் கைதுசெய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்ட், தமாசா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மூன்று பேரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிதின் சாம்ப்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆர்யன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ஆஜராகி வாதாடினார். ஆர்யனிடமிருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், அவர் போதைப்பொருள் உட்கொண்டார் என்பதை நிரூபிக்க எந்தவித மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை என்றும், விதிகளை மீறி ஆர்யன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் முகில் வாதிட்டார்.

அர்பாஸ் மெர்ச்சண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகி வாதாடினார். அவர், “போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கிரிமினல் சட்டப்பிரிவு 41-ஏ யின் விதிகளை மீறி சட்டவிரோதமாகக் கைதுசெய்திருக்கின்றனர். வாட்ஸ்அப் உரையாடல்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதை முந்தைய தீர்ப்புகளில் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது” என்று வாதிட்டார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், மனுதாரர் புதிதாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் கிடையாது என்றும், இரண்டு ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்திவந்திருக்கிறார் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிதின், ஆர்யன் உட்பட மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விரிவான தீர்ப்பு விவரம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனால், ஜாமீன் பெற்றபோதும் மூன்று பேரும் உடனே விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டு 25 நாள்கள் கழித்து ஜாமீன் கிடைத்திருக்கும்போதும், சிறையிலிருக்கும் ஆர்யன் உட்பட மூன்று பேரும் வெள்ளிக்கிழமைதான் சிறையிலிருந்து வெளியில் வர முடியும் என்று கூறப்படுகிறது. ஷாருக் கான் தனது மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். அடிக்கடி தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவந்தார். ஜாமீன் கிடைத்த செய்தியைக் கேட்டவுடன் ஷாருக் கானின் வீட்டின் முன்பு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்தில் ஷாருக் கானை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அவர்களை ஷாருக் கான் சந்திக்கவில்லை. ஆர்யன் கானுக்கு வரும் 2-ம் தேதி பிறந்தநாள் என்பதால், அதற்குள் அவர் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், ஜாமீன் வழங்க கோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. மூன்று பேரும் தங்களது பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணை குறித்து வெளியில் எந்தவித அறிக்கையும் வெளியிடக் கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சியங்களை அழிக்க முயலக் கூடாது. மும்பைக்கு வெளியில் செல்வதாக இருந்தால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். கோர்ட் விசாரணைக்கு முழுமையாக ஆஜராக வேண்டும். விசாரணையைத் தாமதப்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்றும், நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.