அரச பங்காளிகளை நீக்கும் உரிமை யாருக்கும் இல்லை! – ரோஹிதவுக்கு வாசுதேவ பதிலடி.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கோ, அதில் இருக்கும் நபருக்கோ, அணிக்கோ அரசின் கூட்டணிக் கட்சிகளை நீக்கும் உரிமையில்லை.”

– இவ்வாறு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகள், அரசில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் சம்பந்தமாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சிங்கள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு என்பது என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசு என்பது கூட்டணி அரசு. கூட்டணி அரசில் கூட்டணிக் கட்சியினருக்கு இடையில் வெவ்வேறான நிலைப்பாடுகள் இருப்பது சாதாரணமானவை.

தற்போதைய அரசு நாங்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அரசு. அவ்வாறு உருவாக்கிய அரசில் இருந்தவாறு எமது நிலைப்பாடுகளைக் கூற உரிமையில்லை என்று கூறுவார்கள் எனில், அதனைத் தீர்மானிப்பது நீதிமன்றத்தில் அல்ல, அரசியல் ரீதியாகவே தீர்மானிக்க வேண்டும்.

யார் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்? இவர்களே எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக எமது கூட்டணிக் கட்சியின் தலைவர் ஒருவருக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தனர். ஒரே அரசுக்குள் இருந்துகொண்டு இதனை எப்படிச் செய்ய முடியும்?

தற்போது இந்தப் பிரச்சினையைப் பெரிதாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது அரசுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினை என்று கூறுமளவுக்கு சிலர் மோசமானவர்களாக மாறியுள்ளனர். அப்படியானால், இவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அவர்களால் தனித்துத் தீர்மானங்களை எடுக்க முடியாது. அனைவரும் இணைந்தே அரசை உருவாக்கினோம். அப்படியானால், அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒருவரால் எப்படித் தீர்மானங்களை எடுக்க முடியும்?

உலகத்துக்கு சட்டத்தை உருவாக்க வேண்டுமாயின் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷீ. பின்ஜின் கூறியிருந்தார். அமெரிக்க தனித்து அதனை உருவாக்க முடியாது. தீர்மானங்களை எடுக்க வேண்டுமாயின் நாங்கள் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும். அதனை விடுத்து தனிக் கட்சியால் தீர்மானங்களை எடுக்க முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.