புனித ராஜ்குமாரால் கண் தானம் செய்வோரின் எண்ணிக்கை கர்நாடகாவில் கணிசமாக அதிகரிப்பு!!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவைத் தொடர்ந்து கண் தானம் செய்வோரின் எண்ணிக்கை கர்நாடகாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. அவரது மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் தற்கொலை காரணமாக ரசிகர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னட சினிமா ரசிகர்களால் அப்பு என்றும், பவர் ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29-ம் தேதி காலை உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழக நடிகர்களான சிவகார்த்திகேயன், சரத் குமார், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நேரடியாக பெங்களூருவுக்கு சென்று மறைந்த புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் புனித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தான் உயிருடன் இருக்கும்போதே, மறைவுக்கு பின்னர் கண்களை தானம் செய்வதாக புனித் அறிவித்திருந்தார். இதன்படி அவரது இரு கண்கள் தானம் பெறப்பட்டு, 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்களின் மேல் பாகம், மற்றும் கீழ்பாகம் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்ட 4 பேருக்கு பொருத்தப்பட்டது. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் அளித்து வந்த கல்வி உதவி, முதியோர் இல்லம் உள்ளிட்ட சேவைகள் நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புனித்தை பின்பற்றி அவரது ரசிகர்களும் கண்தானம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு மூத்த கண் மருத்துவர் புஜங் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், ‘புனித்தின் கண்தானத்திற்கு பிறகு மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் 100-க்கும் அதிகமானோர் எங்கள் மருத்துவமனையில் கண்தானம் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் 14 பேரிடமிருந்து 28 கண்களை தானமாக பெற்றுள்ளோம். முன்பெல்லாம், ஒரிரு கண்கள் தானமாக கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்தது. மக்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுவதற்கு புனித் ராஜ்குமார் தான் காரணம்’ என்றார்.

உயிரிழந்த நாளன்று காலை 11 மணியளவில், புனித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் அவரது இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு தீவிர உடற்பயிற்சியே காரணம் என உறுதிபடுத்தப்படாத தகவல் பரவியது. இதையடுத்து கர்நாடகாவில் இதயங்களை பரிசோதனை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 100-150 என்ற எண்ணிக்கையில் இருந்த இதய பிரிவு புற நோயாளிகளின் எண்ணிக்கை 500-யை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் புனித்தின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் தற்கொலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 3-ம்தேதி பரத் என்ற ரசிகர் தும்குருவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறைவுக்கு முன்பாக, அப்புவைப் போல தனது கண்ணையும் தானமாக கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதேபோன்று பெங்களூரு அருகே ஆனேக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தனது முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக தனது மனைவியுடன் திருப்பதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட அவர், பயணத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு விரைந்தார். கடந்த 31-ம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒருபக்கம் புனித்தின் மறைவால் கண்தானம், பொதுமக்கள் சேவை, கல்வி உதவி, முதியோர்கள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அவர் மறைவைத் தாங்காமல் ரசிகர்கள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்து வருவது வருத்தம் அளிப்பதாய் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.