ஹக்கீமும் மனோவும் சம்பந்தனுடன் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். மீண்டும் நாளைமறுதினம் முதல் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு இடையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ் பேசும் தரப்புகள் ஐக்கியப்பட்டுச் செயற்படும் முயற்சி குறித்துப் பேசுவதற்கு இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது என அறியவந்தது.

13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை வற்புறுத்தும்படி, தமிழர் தரப்புக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தியாவைக் கோருவதற்கான் ஓர் ஏற்பாட்டைச் செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்காக யாழ்ப்பாணத்தில் ரெலோவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றவில்லை. அது குறித்து மனோ கணேசனும் ஹக்கீமும் சம்பந்தனுடன் நேற்று பேச்சுகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத் தொடரின் அடுத்த கூட்டம் கொழும்பில் நடைபெறும்போது அதில் பங்கு பெறுமாறு இருவரும் சம்பந்தனைக் கோரினர்.

நாளைமறுதினம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகின்றது. தொடர்ந்து வரவு – செலவுத் திட்ட சமர்ப்பிப்பும் அதை ஒட்டிய விவாதங்களும் இடம்பெற இருக்கின்றன. அவற்றுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் பேச்சு நடத்தி, இவ்விடயம் குறித்து ஒரு முடிவு எடுக்கலாம் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார் எனவும் அறியவந்தது.

நேற்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும், திருப்தி தருவதாகவும் அமைந்தது எனவும், அடுத்த சுற்றுப் பேச்சுக்களின்போது காத்திரமான முடிவு எடுக்கப்படும் எனவும் ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தமிழர் தரப்புகள் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதற்கோ அல்லது தமிழர் தரப்புகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கோ தமிழரசுக் கட்சி எதிரானதல்ல என்று நேற்று தம்மைச் சந்தித்த மனோ கணேசனிடமும் ஹக்கீமிடமும் குறிப்பிட்ட சம்பந்தன், உண்மையில் 13 இற்கு ஆதரவு தேடும் இந்த முயற்சி தெற்கில் சிங்களக் கட்சிகளை இணங்க வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கப்பட வேண்டும் எனவும் பதிலளித்துள்ளார் எனவும் அறியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.