பன்னிரண்டு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022


13-11-2021 முதல் 12-11-2022 வரை

பதினோராமிடத்தில் குரு பகவான்; பார்க்கும் தொழிலில் லாபம் வரும்!

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் மேஷ ராசி நேயர்களே!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.11.2021 முதல் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இது வரவை பெருக்கிக் கொடுக்கும் இடமாகும். எனவே தொழிலில் எதிர்பார்த் ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங் கும் திட்டம் நிறைவேறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். வெளிநாடு தொடர்பான வகையில் வெற்றிக ரமான தகவல் வந்து சேரும். அடுக்கடுக்காக ஒப்பந்தங் கள் வந்து அலைமோதும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கலாம். உடன்பிறந்தவர் களோடு நல்லுறவு ஏற்படும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகளும் தேடிவரலாம். `உத்தியோகத்தில் இருந்த படியே தொழில் செய்யலாமா?’ என்ற சிந்தனையும் மேலோங்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடியே முடிக்கக் கூடிய விதத்தில், இந்த குருப்பெயா்ச்சி அமைகின்றது.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் பதிவதால், வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பூர்வ புண்ணியத்தின் பலனாக, உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும் நேரம் இது. பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வழிபிறக்கும். நிரந்தர வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். நீடித்த நோய் அகலும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி பலன்தரும். குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், களத்திர ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். தம்பதியர்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் அகலும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிநாதனாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். ராசிநாதன் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சரிப்பது யோகம்தான். ‘குருமங்கள யோகம்’ என்ற அடிப்படையில் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பேசி வந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் எனப்படும் கும்ப ராசியில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரம் சதயம். இது ராகுவிற்குரிய நட்சத்திரம். அந்த ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் இருக்கிறார். இக்காலத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். எனவே பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். பிடிவாதக் குணத்தை தளர்த்திக் கொண்டு செயல்படுவது நல்லது. உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி நடைபெறும் காலத்தில், 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகுபகவான், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப்போகிறார். இதன் பயனாக, சில நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வரலாம். ஊர் மாற்றம், இடமாற்றம் என்று எதுவாக இருந்தாலும், வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். அதே நேரம் சப்தம ஸ்தானத்திற்கு கேது வருவதால், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக விளக்கேற்றி வைத்து வலம்புரி விநாயகரையும், குருபகவான் படம் வைத்து குருவையும் வழிபட்டு வாருங்கள்.

செவ்வாய் – சனிபார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய் – சனி பார்வையும், 26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய் – சனி சேர்க்கையும் ஏற்படுகிறது.

இந்த இரண்டு காலகட்டங்களிலும், மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. எதிர்மறைச் சிந்தனை களைத் தவிர்க்க வேண்டும். நேர்மறைச் சொற்களையே அதிகம் உபயோகப்படுத்துங்கள். பிடிவாதக் குணத்தால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வதோடு, அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும், அருளாளர்களின் ஆசியையும் பெற்று செயல்படுவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இந்த குருப்பெயர்ச்சியால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். கணவன் – மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். பிள்ளை களால் உதிரி வருமானம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கற்பக விநாயகர் வழிபாடு கவலையைப் போக்கும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

பத்தாமிடத்தில் குரு பகவான்; பதவியில் மாற்றம் உருவாகும்!

ஆலோசனைகள் சொல்வதில் அசகாய சூரர்கள் என்று பெயர் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட நியதி. ஆனால் இப்பொழுது சுபகிரகமான குருவே அமரப்போகின்றார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே அவர் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்.

10-ல் வந்த குருவால் ஏற்படும் பதவி மாற்றம் நல்ல மாற்றமாகவே இருக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். சிலருக்கு பதவி நீடிப்புகள் ஏற்படலாம். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே அந்த 3 இடங்களும் புனிதமடைகின்றன. குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஸ்தானம் பலப்படுகின்றது. அது, வாக்கு, தனம் எனப்படும் இடமாகவும் கருதப்படுவதால் வருமானம் அதிகரிக்கும். வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கேட்ட சலுகைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். இதுவரை வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறைந்து சந்தோஷத்தைக் கொடுக்கும். தொழிலை மேம்படுத்த அதற்கான முதலீடுகள் செய்ய விரும்புபவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கள் தேடிவரும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்குஅதிபதியானவர் செவ்வாய். களத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது சுபச்செலவுகள் அதிகரிக்கும். படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் ஆளுக்கொரு இடத்தில் இருந்து பணிபுரிந்தால், அவர்கள் ஒரே ஊரில் பணிபுரியும் வாய்ப்பு இனி அமையும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசியிலேயே ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். ராகு சுயபலமற்ற கிரகம். அவர் ஆரம்பத்தில் சுக்ரன் வீட்டில் சஞ்சரிக்கின்றார். எனவே சொத்து விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் பணி ஓய்விற்குப் பிறகும் பணி நீடிப்பு கிடைக்கலாம். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022 வரை)

நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும். காரணம், குரு உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாவார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அஷ்டம-லாபாதிபதியான குரு தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இழப்புகளையும் கொடுப்பார். அதை ஈடுகட்ட லாபத்தையும் கொடுப்பார். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

குருப்பெயா்ச்சி காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராகு, 12-ம் இடமான விரய ஸ்தானத் திற்கு செல்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 6-ம் இடத்திற்கு செல்ல இருக்கின்றார். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வெளிமாநிலம் அல்லது ெவளிநாட்டில் பணிபுரிய வரும் வாய்ப்புகளைப் பற்றிச் சிந்திப்பீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் சிவபெருமானின் குடும்பப் படம் வைத்து திருவாசகம் பாடி வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது உங்களுக்கு அனுகூலமான நாளில் வைரவன்பட்டியில் இசைபாடும் கல்தூண்களுக்கு நடுவில் அமர்ந்து அருள்வழங்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2020 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கை காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகத்தை தரக்கூடியவர் சனி. அவரை சப்தம விரயாதிபதியான செவ்வாய் பார்ப்பதால் குடும்பத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரலாம். கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். வாகனத்தால் தொல்லை உண்டு. `வாங்கிய இடத்தை விற்கமுடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள்.

பெண்களுக்கான பலன்கள்

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு நினைத்த காரியம் நிைறவேறும். குருபார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் அமையும். வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

ஒன்பதில் வந்தது குரு பகவான்; பொன் பொருள் சேரும் இனிநாளும்!

திட்டங்களைத் திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்பொழுது 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருகின்றார். சப்தம ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். மேலும் அதன் பஞ்சம பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். உங்கள் லட்சியக் கனவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறப் போகின்றது. பணவரவு அதிகரிக்கும். இனிய விதத்தில் எதிர்பார்த்த பலன்கள் நடைபெறும்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே இ்ந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. ஜென்மத்தைக் குரு பார்ப்பதால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். பார்த்த இடம் செழிக்கும். பட்ட இடம் துளிர்க்கும். பரபரப்பாகச் செயல்பட்டு பாராட்டும், புகழும் பெறப்போகிறீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிவேகமாக முன்னேற்றம் காணப் புதுவழிபிறக்கும்.

வெற்றிகள் ஸ்தானம் பலம் பெறுவதால் இந்த நேரத்தில் மனத்தடுமாற்றங்கள் அகலும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ, புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே உங்களுக்கு பூர்வ புண்ணியத்தின் பயனாக என்னென்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் இப்பொழுது கிடைக்கப் போகின்றது. குறிப்பாக பிள்ளைப் பேறுக்காகத் தவமிருக்கும் தம்பதிகளுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் குருப்பெயர்ச்சி இது.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர். எனவே வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் அதை சமாளிக்கும்ஆற்றல் உங்களுக்கு உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் வரப்போகின்றது.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். சுயபலமற்ற கிரகம் ராகு என்பதால் அது இருக்கும் இடத்தின் அதிபதியைப் பொறுத்தே பலன்களைக் கொடுக்கும். தொழில் வளம் சீராக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். அவர்கள் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்களும் வெற்றிபெறும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2021 வரை)

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குவதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் சூடுபிடிக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். அதே நேரத்தில் 6-ல் உள்ள கேது பஞ்சம ஸ்தானத்திற்கு வருகின்றார். எனவே லாப ஸ்தானம் வலுவடைகின்றது. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். இதுவரை படித்து முடித்தும் வேலையில்லாமல் இருந்த பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். பூர்வீக இடத்தைக் கொடுத்துவிட்டு புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்துப் பூஜை அறையில் விஷ்ணு-லட்சுமி படம் வைத்து திருமால் கவசமும், திருமகள் கவசமும் பாடி வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்றநாளில் திருவேங்கை வாசலில் உள்ள யோகம் தரும் குருதட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.12.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. இருப்பினும் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6-க்கு அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி சனியைப் பார்ப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்களும் ஏற்படும். ஒரு பெரும்தொகை இட விற்பனையால் கிடைக்கும். `கட்டிடம் கட்டியும், வாடகைக்கு விட முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல யோகம் இப்பொழுது அமையும். இடமாற்றங்கள் இனிமை தரும். உத்தியோக மாற்றங்கள் உயர்விற்கு வழிகாட்டும்.

பெண்களுக்கான பலன்கள்

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளி வழங்கப்போகின்றது. குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொட்டது துலங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை சிறப்பாக நடத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு உத்தியோகத்தோடு சுயதொழில் செய்யும் முயற்சி கைகூடும். ஆதியந்தப் பிரபு வழிபாடு வளர்ச்சி தரும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

எட்டில் வந்தது குரு பகவான்; எதிலும் கவனம் இனித்தேவை!

எந்த நேரமானாலும் கேட்டவர்க்கு கேட்ட உதவிகளைச் செய்து கொடுக்கும் கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் 8-ம் இடத்திற்குச் செல்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே, 6-க்கு அதிபதி 8-ம் இடத்தில் மறைவது நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப இடையிடையே நல்ல பலன்களும் நடைபெறும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை வந்தாலும், அவற்றை அடைக்கக் கூடிய வாய்ப்பும் அடுத்தடுத்து வந்து சேரும்.

இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். இடர்பாடுகள் ஏற்படுமேயானால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தன ஸ்தானம் புனிதமடைகின்றது. அது மட்டுமல்ல, வாக்கு மற்றும் குடும்பம் பற்றிய தகவல் அறியும் இடமாகவும் 2-ம் இடம் அமைவதால் குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு வேலை கிடைத்து வருமானம் அதிகரிக்கும். பற்றாக்குறை அகலும். அரசு வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி தரும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்வதே நல்லது,

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாயின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டு.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சகோதர வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ெவளிநாட்டில் பணிபுரியும் உறவினர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். மேலும் யோக காரகனாகவும் விளங்குபவர். எனவே அவர் சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் யோகமான காலம் தான். எனவே வாங்கல்-கொடுக்கல்கள் திருப்தி தரும். வளர்ச்சி அதிகரிக்கும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். சுயபலமற்ற கிரகம் ராகு என்பதால் அவர் சஞ்சரிக்கும் வீட்டிற்கு அதிபதியான சுக்ரனின் தன்மையைப் பொறுத்து உங்களுக்கு பலன்களை வழங்குவார். எனவே இக்காலத்தில் செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். செய்தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். கடன் சுமையின் காரணமாக கவலைகள் அதிகரிக்கும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022)

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மறைமுக எதிர்ப்புகளும், மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். கடன்சுமை கூடும். நிதானத்தோடும், பொறுமையோடும் செயல்படுவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

குருப்பெயா்ச்சிக் காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இனி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளைச் செய்து முடிப்பீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள் வழங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம் நேரில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. கண்டகச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் விரயங்கள் கடுமையாக இருக்கும். வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும். தொழிலில் பணியாளர்களால் நிம்மதி குறையும். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் குணங்களில் மாறுபாடு ஏற்படும். திடீா் பணிமாற்றங்கள் நிம்மதி இன்மையைக் கொடுக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் தேடி வரும். உறவினர் பகை உருவாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

ஏழில் வந்தது குரு பகவான்; இனி எல்லா நாட்களும் நலமாகும்!

கேட்ட உதவிகளைக் கேட்ட உடன் செய்து கொடுக்கும் சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானமாகும். அங்கு அமர்ந்திருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் முழுமையாகப் பதிகின்றது. ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கேற்ப இதுவரை ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் ஈடுசெய்து கொடுக்கப் போகின்றார். பொருளாதாரத்தில் நிறைவு, புகழ், கீர்த்தி, செல்வாக்கு, அருளாளர்களின் ஆதரவு, அரசியல்வாதிகளின் நட்பு, சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் சூழ்நிலை போன்ற நல்ல வாய்ப்புகள் வரப்போவதை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கடன் சுமை முழுமையாக குறைந்து கவலைகள் தீரும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். மேலும் அபரிமிதமான வளர்ச்சி காண சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, 3, 11 ஆகிய இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்துடன் பணிபுரிந்து உன்னத வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கை கூடிவரும். வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைவதால் வெற்றிக் கனியை விரைவில் எட்டிப் பிடிப்பீர்கள். தொழில் சூடு பிடிக்கும். கூட்டுத்தொழில் தனித்தொழிலாக மாறவும் வாய்ப்புகள் கைகூடி வரும். அரைகுறையாக நின்ற வேலைகள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பாராத விதத்தில் பலமடங்கு லாபம் கிடைக்கும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். புதிய கூட்டாளிகள் வந்திணைந்து வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். உயர்பதவி வகிப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு உண்டு.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். யோக காரகனான செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். தொழில் வளம் சிறக்கும். தொல்லைகள் அகலும். கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். தெளிந்த மனநிலையோடு செயல்படுவீர்கள்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இப்பொழுது ராகு சஞ்சரிக்கின்றார். அவர் சஞ்சரிக்கும் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார். குறிப்பாக தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பழைய கடன் பாக்கிகள் இப்பொழுது வசூலாகும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும், இழப்புகள் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும். திட்டமிட்ட காரியங்கள் சில நடைபெறாமலும் போகலாம். எதிரிகளை அரவணைத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற நேரங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கின்றார். இதுவரை சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் இனிமேல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பிள்ளைகளின் பட் டப்படிப்பு சம்பந்தமாக நீங்கள் செய்யும் முயற்சி கைகூடும்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவதோடு, வாய்ப்பிருக்கும் பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்-சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் யாரையும் நம்பிச் செயல்பட முடியாது. `நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வீண் பழி வந்து சேரும். ஒரு பக்கம் வருமானம் வந்தாலும் மற்றொரு பக்கம் இரு மடங்கு செலவாகும். குடும்ப ஒற்றுமை குறையலாம். எனவே இக்காலத்தில் எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு குருவின் பார்வை இருப்பதால் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உடல்நலம் சீராகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லறம் இனிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வும் வந்து சேரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். குரு பகவான் வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

ஆறில் வந்தது குரு பகவான்; அமைதியும் நிதானமும் இனித்தேவை!

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்திக்கும் கன்னி ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் 6-ம் இடத்திற்கு செல்கின்றார். ‘ஆறில் குரு வந்தால் ஊரில் பகை’ என்பது பழமொழி. ஆனால் உங்கள் ராசியை பொறுத்தவரை குரு பகவான் 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் ஆறில் வரும் பொழுது யோகம் செய்யும்’ என்பார்கள்.

எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அதன் பார்வை பலத்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்குமிடமாக 6-ம் இடம் கருதப்படுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பாதிக்காது. எனவே குருவிற்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்த குரு பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைந்து நன்மைகளைக் கொடுக்கலாம். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில் அமையும். முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் சம்பளம் தருகிற வேலைக்கு முயற்சி செய்தால் அது கிடைக்கும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு உங்கள் பணியில் திருப்தி இல்லாமல் போகலாம். இதனால், வேறு இடத்திற்கு மாறிக்கொள்ளலாமா, அல்லது சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள மாட்டார்கள். எனவே கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. உடல் நலனில் கொஞ்சம் கவனம் தேவை.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (13.12.2021 முதல் 1.3.2022)

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் ராகு இருக்கின்றார். அது சுக்ரனின் வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன்களையே வழங்கும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடை பெறும். உடன்பிறப்புகளை அனுசரித்துக் கொள்வது நல்லது.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2022 முதல் 13.4.2022 வரை)

இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற வாய்ப்புகள் கைகூடிவரும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். ெவளிநாட்டு முயற்சியில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022-ல் ராகு -கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரித்து வந்தார். சகாய ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்தார். இப்பொழுது இரண்டாமிடத்தில் கேதுவும், எட்டாமிடத்தில் ராகுவும் வருகிறார்கள். இந்த மாற்றம் நல்ல மாற்றம் தான். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப் பொழுது விலை உயர்ந்து உங்களை செல்வந்தராக்கலாம். தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு-லட்சுமி, படம்வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது, வாய்ப்பிருக்கும் பொழுது சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்திலுள்ள திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தன ஸ்தானத்தில் உள்ள செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனியைப் பார்க்கின்றது. சனியும் செவ்வாயும் பார்ப்பதால் குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீ்ண்டும் தலைதூக்கலாம். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் முடிவு கிடைக்க தாமதப்படும். தனவிரயம் உண்டு. உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க இயலாது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும்.

பெண்களுக்கான பலன்கள்

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம். சக்கரத்தாழ்வார் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

ஐந்தினில் வந்தது குரு பகவான்; ஆயினும் கவனம் மிகத்தேவை!

மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படும் துலாம் ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 முதல் 5-ம் இடத்திற்கு செல்கின்றார். அதே நேரத்தில் அவரது பார்வை உங்கள் ராசியிலும் பதிகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால் அதன் பார்வை பலன் கிடைத்தாலும் கூட எதிர்பார்த்த அளவிற்கு நன்மைகளை வழங்காது. மேலும் அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும் உங்களுக்கு இருக்கின்றது. எனவே விரயங்கள் மிகமிக அதிகரிக்கும். வீடு, இடம், உத்தியோகம் போன்றவற்றில் எதிர்பாராத மாற்றம் ஏற்படலாம். குருவை வழிபடுவதோடு சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். என்னதான் பகை கிரகமாக விளங்கினாலும் குருவிற்கு ஓரளவேனும் பலன் கிடைக்க வேண்டுமல்லவா? எனவே, அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கத்தான் செய்யும். அதே நேரம் குரு பார்வை இருப்பதால் மருத்துவ ஆலோசனைகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை நீங்களே கவனித்துப் பார்ப்பது நல்லது. பிறரிடம் ஒப்படைத்தால் அது செவ்வனே நடைபெறாமல் பிரச்சினையை உருவாக்கும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் புனிதமடைகின்றது. இதன் விளைவாக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் தகராறுகள் ஏற்பட்டு, அதன்பிறகே நல்ல முடிவிற்கு வரும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். தூர தேசத்தில் இருந்தோ, வெளிமாநிலங்களில் இருந்தோ பணிபுரிய அழைப்புகள் வரலாம். அதை யோசித்துப் பார்த்து ஏற்றுக்கொள்வதே நல்லது.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே குடும்பத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகமும் ஒருசிலருக்கு வாய்க்கும். வருமானம் திருப்தி தரும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ராகு இருக்கிறார். ‘மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்’ என்பது பழமொழி. எனவே எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் உண்டு. பிரிந்து சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் இக்காலத்தில் நடைபெறலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். கடன் சுமை கொஞ்சம் கூடலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இனி 7-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். களத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப்போவதால் வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது.

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்தகேது, இப்பொழுது ஜென்ம ராசிக்கு வருகின்றார். எனவே ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து முல்லைப்பூ மாலை சூட்டிக் குரு கவசம் படிப்பதோடு, யோக பலம் பெற்ற நாளில் இரணியூர் ஆட்கொண்ட நாதரையும், சிவபுரம் தேவி மற்றும் ஆலயத்திலுள்ள தட்சிணா மூர்த்தியையும் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலம் மிகமிகக் கடுமையான காலமாகும். எதிலும் கவனம் செலுத்த இயலாது. சுகக்கேடுகளும், விரயங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் தாக்கங்களும், வீண் பழிகளும் ஏற்படும். கடமையில் தொய்வு ஏற்படும். குடும்ப ஒற்றுமை குறையும். கூட்டாளிகள் உங்களை விட்டு விலக நேரிடும். இக்காலத்தில் செவ்வாய் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதன் மூலமே நன்மைகளைப் பெற முடியும்.

பெண்களுக்கான பலன்கள்

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி ஓரளவே நன்மை செய்யக் கூடியதாக இருக்கின்றது. அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காணலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்கள் பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சனி பகவான் மற்றும் குரு பகவான் வழிபாடு சந்தோஷத்தை தரும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

நாலில் வந்தது குருபகவான்; வாழ்வில் வசதிகள் இனிக்கூடும்!

‘வெற்றி’ ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் 13.11.2021 முதல் நான்காமிடமான சுக ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அர்த்தாஷ்டம குருவாக வந்தாலும் கூட பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான குரு, சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. இதனால், உங்களுக்கு தொழில் வளர்ச்சியும், திருப்தியான வருமானமும் வந்து சேரும். அரைகுறையாக நின்ற காரியங்கள் எல்லாம் இப்பொழுது துரிதமாக நடைபெறும். புதிய வாகனம் வாங்கும் யோகம், நிலம், பூமி வாங்கும் யோகம், வீடு கட்டும் முயற்சியில் வெற்றி போன்றவை ஏற்படும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வந்து மகிழ்ச்சியடைய வைக்கும். மேலும் வளர்ச்சி காண, குரு கவசம் பாடி வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயா்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் அருட்பார்வையால் தொட்டது துலங்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிக்குரிய தகவல்கள் வீடு வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படப் போகிறார்கள். இப்பொழுது குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் பணிபுரியும் இடத்தில் நல்லபெயர் கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணையலாம்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் புனிதமடைகின்றது. தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். வாங்கல்-கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். வளமான வாழ்விற்கு வழிவகுத்துக் கொடுக்கும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவு கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டில் இருந்தும் கூட ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய மாற்றங்கள் வரலாம்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். அதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். உறவினர் பகை மாறும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உடல்நலம் சீராகும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். அவர் இருப்பது சுக்ரனுடைய வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களையே வழங்குவார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இக்காலத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களால் பெருமை சேரும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியாக விளங்குபவர் குரு பகவான். எனவே குரு தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக வந்து சேரும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நீடித்த நோய் அகலும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சிக் காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த ராகு இப்பொழுது 6-ம் இடத்திற்கு வரப்போகின்றார். ஜென்மத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது 12-ம் இடத்திற்குச் செல்லவிருக்கின்றார். 6-ல் ராகு இருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் என்பார்கள். அந்த அடிப்படையில் இப்பொழுது உங்களுக்கு கிரக அமைப்புகள் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய திருப்பங்களும் உருவாகும். 12-ல் இருக்கும் கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் கற்பக விநாயகர் படம் வைத்து, கவசம் பாடி வழிபடுவதோடு, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரையும், அங்குள்ள குரு பகவானையும் யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதாலும், சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதாலும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. உடன்பிறப்புகளையும், உடன் இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொது நலத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். செவ்வாய் சனிக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் நல்ல வாழ்வு அமையும்.

பெண்களுக்கான பலன்கள்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக சுபவிரயங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடினாலும், அதற்குரிய விதத்தில் ஊதியமும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

மூன்றில் வந்தது குரு பகவான்; முயற்சிகள் முடிவில் வெற்றிதரும்!

எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 ல் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். என்றாலும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால் விரயங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. ஒரு காரியத்தை இருமுறை செய்யும் சூழ்நிலையும், உடன்இருப்பவர்களின் ஒத்துழைப்புக் குறைவும் உருவாகலாம். சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும், குரு ப்ரீதியும் செய்வதன் மூலம் நன்மைகளை அடைய முடியும்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே இந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. குறிப்பாக குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும். ஆரோக்கியச் சீர்கேடுகள் படிப்படியாக அகலும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இன்னும் இருக்கின்றது என்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உறவினர்கள் வழியில் நீங்கள் உதவி செய்தாலும் கூட, அவர்கள் நன்றி காட்டுவார்களா என்பது சந்தேகம் தான். குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே, எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தாலும் அதைச் செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகும். தந்தை வழி உறவு வலுப்பெறும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் ஓரளவு பிரச்சினைகள் ஏற்பட்டு பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியலாம்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். முன்னேற்றப் பாதையில் வந்த குறுக்கீடு சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். வாடகைக் கட்டிடத்தில் நடந்த தொழிலை இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் ஒருசிலருக்கு வாய்க்கும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நிதானத்துடன் செயல் படுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். அந்த வீடு சுக்ரன் வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன் களையே வழங்கும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, மறைந்த ராகு நிறைந்த தன லாபத்தையே கொடுப்பார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆயினும், வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகளும், அவர்களுக்கு ஆரோக்கியத் தொல்லைகளும் உருவாகும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

இக்காலத்தில் ஓரளவு உங்களுக்கு நற்பலன்கள் நடைபெறும். ராசிநாதனாகக் குரு விளங்குவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஒருசிலருக்கு ஏற்படலாம். ஏதேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பொழுது உடனே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 5-ம் இடத்திற்கு மாறப்போகின்றார். 12-ல் சஞ்சரித்து வந்த கேது இனி 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்லப்போகின்றார். இதன் விளைவாகப் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களை விற்கக் கூடிய சூழ்நிலை ஒருசிலருக்கு ஏற்படும். வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், தளரவிடவேண்டாம். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்யுங்கள்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் பட்டாபிஷேக ராமர் படம் வைத்து லட்சுமி, விஷ்ணுவிற்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. இளையாற்றங்குடி நித்யகல்யாணி – கயிலாச நாதர் ஆலயத்திற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று அங்குள்ள குரு தட்சணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. உங்கள் ராசிக்கு 5, 12-க்கு அதிபதியான செவ்வாயை சகாய ஸ்தானாதிபதி சனி பார்க்கின்றார். பகைக்கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இருக்கும் பொழுது எந்த முயற்சி செய்தாலும் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தொழிலில் சில ஏமாற்றங்களும் உருவாகும். பொதுவாழ்வில் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். மனக்குழப்பம் ஏற்பட்டு எந்த வேலையையும் சரிவரச் செய்ய இயலாது. செவ்வாய்க்குரிய சிறப்பு வழிபாடுகளே உங்களுக்கு சீரான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் திருப்தி அளிக்காது. வரவு வந்த மறுநிமிடமே செலவாகலாம். வருங்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகளும், பிரச்சினைகளும் கூடும். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரியும் பெண்களுக்கு பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. வைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

இரண்டில் வந்தது குரு பகவான்; எதிர்காலம் இனி நலமாகும்!

தனது இன்ப துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்திருக்கும் மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.11.2021 முதல் தன ஸ்தானம் எனப்படுகின்ற 2-ம் இடத்திற்கு வருகின்றார். அதே நேரத்தில், ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கமும் இருக்கின்றது. எனவே, ஒருபுறம் உங்களுக்கு பணம் வந்தாலும், மற்றொரு புறம் உங்களுக்கு விரயங்களே அதிகரிக்கும். 2-வது சுற்று சனியின் ஆதிக்கம் நடப்பவர்களுக்கு ‘பொங்கு சனி’ என்பதால் அதன் கடுமை கொஞ்சம் குறையும். இப் பொழுது பெயர்ச்சியாகி இருக்கும் குருபகவான் வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். கொடுக்கல்-வாங்கல்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கின்றார். அவரது பார்வை பதியும் ராசிகள் எல்லாம் புனிதமடையும் என்பதால், அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கிஇருக்கும். பகை பாராட்டிய உறவினர்கள் இனி பாசத்தோடு பழகுவர். உடல் ஆரோக்கியத்திற்கு என்று ஒரு தொகையைச் செலவழித்து வந்த நீங்கள் இனி மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சியடையப் போகிறீர்கள். குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வரலாம். அவர்களுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். தீவிர முயற்சி செய்தும் இதுவரை முடியாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். என்றாலும், ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் இடையிடையே கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். இருப்பினும் நீங்கள் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே சுக லாபாதிபதியான செவ்வாய் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது நற் பலன்களே வந்து சேரும். பொதுவாக சகோதர ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் சஞ்சரிக்கும் வீடு சுக்ரனின் வீடாகும். ராகு சுயபலமற்ற கிரகம் என்பதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன்களை வழங்குவார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நேரமிது. உங்கள் குணமறிந்து குழந்தைகள் நடந்து கொள்வர். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பும் கிடைக்கும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிக மிக கவனம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடும். திடீர் திடீரென விரயங்கள் ஏற்பட்டு திகைக்க வைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயா்ச்சிக் காலத்தில் 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவிருக்கின்றது. இதுவரை 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், இப்பொழுது சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்கு மாறுகின்றார். 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்போது 10-ம் இடத்திற்கு வருகிறார். இதன் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு படம் வைத்துக் குரு கவசம் பாடி வழிபடுவதோடு, தஞ்சை மாவட்டம் திட்டை ராஜகுருவை யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் இருக்கும் இக்காலத்தில் முன்னேற்றத் தடைகள் அதிகரிக்கும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் இருந்து ஒருசிலர் பணி நீக்கம் செய்யப்படுவர். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். என்ன இருந்தாலும் இதுபோன்ற காலங்களில் யோசித்துச் செயல்படுவதே நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடிவந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி சிறிது செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. புதிய வேலை வாய்ப்பை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. சனிபகவான் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

13-11-2021 முதல் 12-11-2022 வரை

ஜென்மத்தில் வந்தது குரு பகவான்; சிந்தித்து செயல்பட்டால் வெற்றியுண்டு!

சந்தர்ப்பம் வரும்போது சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். தன லாபாதிபதியான குரு பகவான் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். காரணம், ‘ஜென்ம குரு, ஜென்ம ராமர் வனத்திலே’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அதாவது, ‘ராமபிரான் வனவாசம் சென்றபொழுது அவருக்கு ஜென்மத்திற்கு குரு வந்தது’ என்று சொல்வார்கள். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களைப் பொறுத்தவரை தொழிலில் எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனால் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். மருத்துவச் செலவுகளும் மனநிம்மதிக் குறைவும் உருவாகலாம். எனவே எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக 5-ம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே இதுவரை முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு அகலும். புத்திர ஸ்தானமாகவும் 5-ம் இடம் கருதப்படுவதால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வரலாம். அவர்களின் எதிர்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே இதுவரை பேசிப் பேசி விட்டுப்போன வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா என்று சிந்திப்பீர்கள் என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இன்றைக்கு பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சியைத் தரும்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி வெற்றி தரும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சுக ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் சஞ்சரிக்கும் வீடு சுக்ரனது வீடாகும். எனவே பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். புதிய இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் சூழ்நிலை உருவாகும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளைச் செய்யும். குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். அதே நேரத்தில் 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேதுபகவான் 9-ம் இடத்திற்கு மாறப்போகின்றார். இதன் விளைவாக உடன்பிறப்புகளோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலத்திலும் கவனம் தேவை.

சிறப்பு வழிபாடு

இல்லத்துப் பூஜை அறையில் பட்டாபிஷேக ராமர் படம் வைத்து, விஷ்ணு கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மாப்பிள்ளை நந்தி, மகிழ மரத்தடி முனீஸ்வரர், சுவாமி, அம்மன், குரு தட்சிணாமூர்த்தி ஆகியவற்றை அனுகூல நாளில் சென்று வழிபட்டு வந்தால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக்காலம்:

26.2.2022 முதல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்-சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். உறவினர் பகை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்திலிருந்து ஒருசிலரைப் பணிநீக்கம் செய்யும் சூழ்நிலை கூட உருவாகலாம். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரமிது.

பெண்களுக்கான பலன்கள்

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்குப் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் கவனம் தேவை. . பிள்ளைகளுக்கான சுபகாரியங்கள் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.


13-11-2021 முதல் 12-11-2022 வரை

பனிரெண்டில் வந்தது குரு பகவான்; பண விரயங்கள் அதிகரிக்கும்!

எந்த வேலையைச் செய்தாலும் அதில் தனது முத்திரையைப் பதிக்கும் மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு சஞ்சரித்து வந்த குரு பகவான் 13.11.2021 முதல் 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 12-ம் இடம் என்பது பயணங்களைக் குறிக்கும் இடமாகும். அயன, சயன ஸ்தானமாகவும் கருப்படுகின்றது. உங்கள் ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் குரு, விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாங்கிய இடம், பூமிகளை விற்க நேரிடும். சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். தொழிலில் முழுமையாக ஈடுபட இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு தான் திறமையாகச் செயல்பட்டாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. பணிபுரிபவர்களுக்கு திடீர், திடீரென மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு உங்கள் சுய ஜாதகத்தில் திசாபுத்திக்குரிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

குருவின் பார்வை பலன்

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றது. ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப அவர் பார்வை பலத்தின் மூலம் சில நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையைச் சரிவரச் செய்து முடிப்பீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் ஜீவன ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது பணி நிரந்தரம் ஆகலாம்.

குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர்.

நட்சத்திர பாதசாரப்படி பலன்கள்

செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம்(13.11.2021 முதல் 12.12.2021 வரை)

உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே இக்காலத்தில் குடும்ப முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது அதற்காக எடுத்த முயற்சி கைகூடும்.

ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(13.12.2021 முதல் 1.3.2022 வரை)

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். அவர் இருக்கும் வீடு சுக்ரனது வீடாகும். நிழல் கிரகமாக ராகு விளங்குவதால் அந்த ஸ்தானாதிபதிக்குரிய பலன்களையே வழங்குவார். வழக்குகள் சாதகமாக முடிவடையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சுய சாரத்தில் குரு சஞ்சாரம்(2.3.2022 முதல் 13.4.2022 வரை)

குரு உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குவதால் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாகும். எனவே ராசிநாதனாக விளங்குவதால் தன சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம், ஊர்மாற்றம், உத்தியோக மாற்றங்களை வழங்குவார்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

குருப்பெயர்ச்சி காலத்தில் 21.3.2022 ல் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ்விருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 2-ம் இடத்திற்கு வரப்போகின்றார். 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இனி 8-ம் இடத்திற்கு வரப்போகின்றார். எனவே சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு தனவரவைக் கொடுத்தாலும், அஷ்டமத்து கேது அதிக அளவில் மனநிம்மதிக் குறைவை ஏற்படுத்தும். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ள இயலும்.

சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் யோக பலம் பெற்ற நாளில் திருவெண்காட்டிலுள்ள அகோரமூர்த்தி சவுபாக்ய துர்க்கை ஆகியவற்றை வழிபடுவதன் மூலம் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய் – சனி பார்வை மற்றும் சேர்க்கை

13.11.2021 முதல் 6.12.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக்காலம்:

26.2.2022 முல் 6.4.2022 வரை மகரத்தில் செவ்வாய்- சனி சேர்க்கைக் காலம்:

இக்காலத்தில் மிக மிக கவனம் தேவை. பணத்தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படும். மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது.

பெண்களுக்கான பலன்கள்

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல் – வாங்கல்களில் விரயங்கள் கூடும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் ஒற்றுமையை தக்க வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.