வரலாற்றுக் கறையான பாரிஸ் படுகொலைகள் : சண் தவராஜா

மனிதகுல வரலாறு இரத்தம் தோய்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அத்தகையதாகவே இருக்கும் என்பதையே தற்போதைய போக்குகளும் கோடிகாட்டி நிற்கின்றன. ஆளுகின்ற வர்க்கம் அதிகாரத்தைப் பிரயோகிப்பதும், ஆளப்படுகின்ற வர்க்கம் அந்த அதிகாரத்தால் பாதிக்கப்படுவதும் காலங்காலமாகத் தொடரும் நிலையாக உள்ளது. மனித சமூகம் நாகரிக வளர்ச்சியைக் கண்டுவிட்ட பின்னரும்கூட இத்தகைய அவலங்கள் முடிவுக்கு வந்துவிடவில்லை. ‘உலகின் கண்களில் இருந்து மறைத்துவிட முடியுமானால் எத்தகைய அநீதியையும் இழைக்க முடியும்’ என்ற சிந்தனையின் ஒரு வெளிப்பாடே 1961ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற படுகொலைகள்.
நாகரிகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் பாரிசில் படுகொலையா? அதுவும் 1961ஆம் ஆண்டிலா? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ஒரு நாட்டில் இது சாத்தியமா என்ற கேள்விகள் வாசகர்களுக்கு எழக்கூடும்.

விலங்கினத்தின் ஒரு அங்கமான மனித இனம், மிருகக் குணத்தை வெற்றிகொள்ள முடியாத மனிதர்களாலும் நிரம்பி இருக்கின்றது. அத்தகைய மனிதர்களின் கரங்களில் அதிகாரம் கிடைக்கின்றபோது படுகொலைகள் நடப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கின்றது. இரண்டாம் உலகப்போரின் போது ஹிற்லரும், அவருடைய ஆதரவாளர்களும் நடத்திய படுகொலைகள் இன்னமும் உலக வரலாற்றில் நிரந்தரக் கறையாக உள்ளதை மறந்துவிட முடியாது.
காலனித்துவ நாடுகளின் வரிசையில் பிரான்சுக்கும் இடம் உள்ளது. குறிப்பாக ஆபிரிக்க நாடுகள் பலவற்றை வளைத்துப்போட்டு, அங்குள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையிட்ட பிரான்ஸ், அந்த நாடுகள் சுதந்திரம் கோரிப் போராடியபோது அவற்றை இரும்புக் கரம்கொண்டு நசுக்கவும் தயங்கவில்லை. பிரான்சின் காலனித்துவ நாடுகளின் வரிசையில் இடம் பிடித்திருந்த அல்ஜீரியா 1830 இல் பிரான்சால் அடிமை கொள்ளப்பட்டது. இறுதியில் 1962 யூலை 5இல் அல்ஜீரியா சுதந்திரம் பெற்றது. அஹ்மட் பென்-பெல்லா தலைமையிலான அல்ஜீரிய தேசிய இராணுவம் நடத்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதற்கு மிகமிக மோசமான மனித உரிமை மீறல்களில் பிரான்ஸ் படைகள் ஈடுபட்டன. 7 முதல் 10 இலட்சம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டதுடன் 20 இலட்சம் பேர்வரை ஏதிலிகளாக மாறி உலகின் பல நாடுகளுக்கும் சென்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் கணிசமானோர் பிரான்சிலும் தஞ்சம் புகுந்தனர்.

பாரிசில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் ‘அடைகள்’ எனக் கேவலமாக அழைக்கப்படும் அல்ஜீரிய நாட்டவர்கள் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் பிரான்ஸ் குடிமக்களாகக் கருதப்பட்டிருந்ததால் அவர்களால் இலகுவாக பிரான்சுக்குள் வர முடிந்திருந்தது. அவ்வாறு வருகை தந்திருந்த மக்கள் தமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு பாரிய ஒத்துழைப்பை நல்கினர். தமது மக்களின் அவலங்களை உலகறியச் செய்யும் வகையில் பல ஜனநாயகப் போராட்டங்களை பிரான்சின் பல பகுதிகளிலும் நடத்தினர்.
அல்ஜீரிய சுதந்திரப் போர் உச்சம் தொட்டிருந்த நேரம். 1961 யனவரி 8இல் அல்ஜீரியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதா இல்லையா என அறியும் மக்கள் வாக்கெடுப்பு பிரான்சிலும் அல்ஜீரியாவிலும் நடைபெற்றது. பிரான்சில் 75.0 வீதமானோரும், அல்ஜீரியாவில் 69.5 வீதமானோரும் சுதந்திரம் வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனாலும், தமது காலனித்துவ மனோபாவத்தைத் துறக்காத பிரான்சின் ஆட்சியாளர்கள் அடக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.

இந்த வேளையில். மௌரிஸ் பப்பொன் என்பவரைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. சிவில் சேவை அதிகாரியான இவர் 1930 முதல் 1967 வரை காவல்துறையின் உயர் பதவிகள் பலவற்றை வகித்த ஒருவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசிப் படையினருக்கு ஆதரவாகச் செயற்பட்ட இவர், போரின் முடிவில் தன்னை சுதந்திரப் போராளியாகக் காட்டிக் கொண்டு கைதில் இருந்து தப்பினார். ஆனாலும், தனது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதைப் பல தடவைகளில் நிரூபித்துள்ளார்.

1956 இல் அல்ஜீரியா சென்ற இவர் அங்கே கைதிகளைச் சித்திரவதை செய்வதில் ஈடுபட்டார். அல்ஜீரியாவின் கொன்ஸ்ரன்ரைன் பிராந்தியத்துக்கான காவல்துறை அதிபராக நியமிக்கப்பட்ட இவர் சுதந்திரப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவரது பதவிக் காலத்தில் கைதிகள் சித்தரவதைகளுக்கு ஆளாகுவது அன்றாட நிகழ்வாகியது. 1957ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டார்கள். 114,000 பேர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். இங்கே நாளொன்றுக்கு 50 முதல் 60 பேர் வரை கொல்லப்பட்டனர். சூனியப் பிரதேசங்கள் தோற்றுவிக்கப்பட்டு கொலையுண்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டார்கள்.
1958 மார்ச் மாதத்தில் இவர் பாரிஸ் நகர காவல்துறை உயரதிகாரியாக நியமிக்கப்பட்டார். அல்ஜீரியப் போர் உச்சமடைந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அரசாங்கமும் உள்நாட்டில் பல நெருக்கடிகளைச் சந்தித்த நேரமது. எனவே, பாரிஸ் பிரதேசத்தைக் ‘கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொறுப்பு’ அவருக்கு ஒப்படைக்கப்பட்டது. பாரிசைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயாராக இருந்த பப்பொன், அரபு மாணவர்களைக் கைதுசெய்து சித்தரவதைகளுக்கு ஆளாக்கினார். அவர்களது நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் தடைசெய்யப்பட்டன. 1958 அக்டோபர் 5இல் அல்ஜீரியர்கள் இரவு 8.30 முதல் அதிகாலை 5.30 வரை வீடுகளை விட்டு வெளியேறா வண்ணம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான, ஒரு மக்கள் கூட்டத்தைப் பிரித்துவைக்கும் வகையிலான இந்த உத்தரவைத் தொடர்ந்து காட்டுப் பிரதேசங்களில் தடுப்பு முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டன. அல்ஜீரியப் பிரஜைகள் சகட்டுமேனிக்குக் கைதுசெய்யப்பட்டு இங்கே சித்திரவதைகளுக்கு ஆளாகினர். காவல்துறையினர் கண்டிப்பாக எத்தனை பேரைக் கைது செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

பிரான்ஸ் இராணுவத்தில் பணிபுரிந்த அல்ஜீரியப் பிரஜைகளை உள்ளடக்கிய துணை இராணுவக் குழுக்களை தனது வழிநடத்தலில் உருவாக்கிய பப்பொன், அவர்களின் துணையோடு அல்ஜீரிய தேசிய இராணுவத்தினுள் ஊடுருவல்களை மேற்கொண்டார். கைது செய்யப்படுபவர்களைச் சித்திரவதை செய்வதற்கென்றே பல தங்குவிடுதிகளை அமர்த்திக் கொண்டார்.

1961 அக்டோபரில் நிலைமை மேசமான கட்டத்தை எட்டியது. 2ஆம் திகதி காவல்துறையினருக்கு வழங்கிய அறிவிப்பில் “ஒவ்வொரு தாக்குதலுக்கும், 10 மடங்கு பதிலடி வழங்க வேண்டும்” என்றார் மௌரிஸ் பப்பொன். “உங்களுக்கு நாங்கள் முழுப் பாதுகாப்பு வழங்குவோம். உங்களது சுய பாதுகாப்புக்காக நீங்கள் எதுவும் செய்யலாம்” என்றார் அவர்.

இத்தகைய பின்னணியிலேயே, 1961 அக்டோபர் 17 பயங்கரம் நடைபெற்றது. அல்ஜீரியப் பிரஜைகளை இலக்குவைத்து தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் ஊரடங்கை எதிரத்து அன்றைய தினம் ஒரு அமைதியான கவனஈர்ப்பு நிகழ்வுக்கு அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. கண்டிப்பாக எதுவித வன்முறைகளும் நிகழக் கூடாது என்ற நிபந்தனையுடன், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் இரவு 8.30 அளவில் பாரிசின் மத்தியில் கூடுமாறு கேட்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பையேற்று சுமார் 30,000 வரையான மக்கள் கூடத் தொடங்கினர். ஆயுதம் தரித்த காவல்துறையினர் வருகைதந்த மக்களைச் சுற்றிவளைக்கத் தொடங்கினர். அதேவேளை, காவல்துறையினரை நோக்கி அல்ஜீரியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு வதந்தி காவல்துறையினர் மத்தியில் பரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தமது வெறியாட்டத்தை ஆரம்பித்தனர்.

மக்களை அங்கிங்கு நகரவிடாது காவல்துறையினர் நெருக்கித் தள்ளினர். சிறிது நேரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கின. தங்கள் உயிரைக் கையில் பிடித்தவாறு சிதறி ஓடிய மக்களை அருகே இருந்த சைன் நதியில் காவல்துறையினர் தூக்கி வீசினர். “எங்களுக்கு நீந்தத் தெரியாது” என்ற மக்களின் ஓலம் அவர்களின் காதுகளை எட்டவில்லை. நீந்தத் தெரியாதவர்கள் ஒரு புறம். நீந்தத் தெரிந்திருந்தும் அக்டோபர் மாதக் குளிரில் நீந்த முடியாமல் போனவர்கள் மறுபுறம்.

சுரங்கத் தொடருந்து நிலையங்களில் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள், அங்கே காத்திருந்த காவல்துறையின் ‘வரவேற்புக் குழு’வினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

காவல்துறைத் தலைமையகத்திற்குக் கொண்டுவரப்பட்டவர்கள் மௌரிஸ் பப்பொன் முன்னிலையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறை மேலிடத்துக்கு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்தே இந்தப் படுகொலைகள் நிறுத்தப்பட்டன. அதற்கிடையில் இங்கே கொல்லப்பட்ட சுமார் 50 பேர் வரையானோரின் உடலங்கள் சைன் நதியில் வீசப்பட்டுவிட்டன.

படுகொலைகள் நிறுத்தப்பட்டாலும் ‘எலி வேட்டை’ என்ற பெயரிலான அல்ஜீரியர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடரவே செய்தன. காவல்துறையின் கொடுமையில் இருந்து தப்புவதற்காக மொரோக்கர்கள் தங்கள் வணிக நிறுவனங்களில் ‘மொரோக்கர்கள்’ என்ற பெயர்ப்பலகையை வைக்கும் அளவிற்கு நிலைமைகள் கடுமையாக இருந்தன.

இந்தச் சம்பவத்தின் போது 14,000 பேர் வரை கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 200 முதல் 300 வரையானோர் கொலையுண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஆனால், 3 பேர் மாத்திரம், அதுவும் தமக்கிடையிலான மோதலின் போதே மரணத்தைத் தழுவினர் எனக் கூறியது காவல்துறை.

அடுத்தடுத்த நாட்களில் சைன் நதியில் இருந்து 110 வரையான உடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டோரில் 15 வயது நிரம்பிய பாத்திமா பேடா என்பவரே வயதில் இளையவராவார். இவரது உடலம் அக்டோபர் 31ஆம் திகதி ஒரு கால்வாயில் கரையொதுங்கியது.

இந்தப் படுகொலைகள் நடைபெற்று 60 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தச் படுகொலைச் சம்பவத்துக்குப் பொறுப்பான ஒருவர் கூட இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் கூட இன்றுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை.

2012ஆம் ஆண்டிலேயே முதல் தடவையாக பிரான்ஸ் அரசாங்கம் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டது. 51 வருடங்களின் பின்னர், அப்போதைய அரசுத் தலைவர் பிரான்சுவா ஹொலாந்தே இதனை அறிவித்தார்.

2019ஆம் ஆண்டு இந்தப் படுகொலையில் பலியானவர்களின் நினைவாக ஒரு நினைவுக்கல் சைன் நதிக் கரையோரம் நிர்மாணிக்கப்ட்டது. அண்மையில், படுகொலையின் 60ஆம் ஆண்டு நினைவாக அறிக்கை விடுத்த பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் “காவல்துறை உயரிதிகாரியின் கட்டளையின் பேரில் நடைபெற்ற படுகொலைகள் நியாயப்படுத்த முடியாதவை” எனத் தெரிவித்துள்ளார். எனினும், நடைபெற்ற சம்பவத்துக்கு அவர் மன்னிப்புக் கோரவில்லை.

அது மட்டுமன்றி, இன்றுவரை இந்தப் படுகொலைகள் தொடர்பில் ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை. மறுபுறம், அல்ஜீரியப் போர் தொடர்பில் குற்றம்புரிந்த அனைவருக்கும் பிரான்சில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது.

மௌரிஸ் பப்பொன் போன்ற ஈவிரக்கமற்ற கொடுங்கோலர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு நாடுகளில் இன்னமும் தங்கள் கொடுமைகளைப் புரிந்த வண்ணமேயே உள்ளனர். மக்கள் விரோத அரசாங்கங்களும் அத்தகையோருக்கு பொது மன்னிப்பு வழங்கி தமது நன்றிக்கடனைச் செலுத்திய வண்ணமேயே உள்ளன.

உலகம் நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது என்பதைப் புரிய வைக்க பாரிஸ் படுகொலை ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு தங்கள் முதுகில் அழுக்கை வைத்திருக்கும் பிரான்ஸ் போன்ற நாடுகள், சிறி லங்காவில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகளை என்னவென்று சொல்வது?

Leave A Reply

Your email address will not be published.