ஜெய்பீம் போல பொலிஸில் ஒருவர் சாவு : மக்கள், பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்! (வீடியோ)

எம்பிலிப்பிட்டி, பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து கிராம மக்கள் இன்று காலை பொலிஸாரை சுற்றி வளைத்த காணொளி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அப்போது போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்தமையை அடுத்தே குறித்த பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சனைக் காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட பனாமுரே வெலிபொத்த யாய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார் எனவும் , பின்னர் பொலிஸ் அறைக்குள் தனது மேலாடையால் தூக்கிட்டு உயிரைப்போக்கிக் கொண்டதாகவும் பொலிஸ் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர், பொலிஸாரால் தாக்கப்பட்டே கொல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனா்.

இந்த முற்றுகை காரணமாக கொலன்னா – எம்பிலிப்பிட்டிய வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு போலிசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்து அடித்துக் கொன்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் முன்வைத்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். .

பாணமுரே பகுதியைச் சேர்ந்த இந்திக்க ஜயரத்ன என்பவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தடியால் தாக்கப்பட்டதாக கடந்த 12ஆம் திகதி, இறந்த நபரின் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அவர் காணாமல் போயிருந்ததாகவும் , பின்னர் நேற்று (16) இரவு 10 மணியளவில் அவரை பொலிசார் கைது செய்திருந்த நிலையில், அவர் தடுப்புக் காவலில் இருக்கும் போது சுருக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பொலிஸாருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.