ஆதிக்க கலாச்சாரத்தை தகர்த்தெரிய முடியவில்லை: சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி பணியிட மாற்றத்தை தொடர்ந்து வெளியிட்டுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞர்கள் என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் சென்றதற்காக சக நீதிபதிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் கொலிஜியத்திடம் வற்புறுத்தியிருந்தனர். எனினும், பணிமாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், தனகு நடைபெறுவதாக இருந்த பிரிவு உபசார விழாவை தவிர்த்த சஞ்ஜிப் பானர்ஜி சாலை பார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார். புறப்படுவதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அதில், தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை. அது உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே . உங்களின் அளவு கடந்த அன்பினால் நானும் என் மனைவியும் உள்ளம் மகிழ்ந்தோம் என்று சக நீதிகளுக்கு கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் தான் நாட்டிலேயே சிறப்பானவர்கள் என்று பாராட்டு தெரிவித்த சஞ்ஜிப் பானர்ஜி, அதிகம் பேசக்கூடிய எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய வயதான நீதிபதியை பொறுமையுடமும் மரியாதையுடனும் நடத்தினீர்கள். உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி தெரிவித்த அவர்இதேபோல வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கு நன்றி கூறியுள்ள சஞ்ஜிப் பானர்ஜி, “ இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தினுள் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெரிய என்னால் இயலவில்லை. இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டுக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.