காலவரையற்ற ஓய்வை அறிவித்த டிம் பெயின்!

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிம் பெயின் தன்னுடன் பணியாற்றும் டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பின் சக பெண் ஊழியருக்கு மோசமான பாலியல் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை அனுப்பியது குறித்த விவரங்கள் வெளியாகி இருப்பதால் கேப்டன் பதிவியிலிருந்து டிம் பெயின் விலகினார்.

டிம் பெயின் அனுப்பிய குறுஞ்செய்திகள், படங்கள் குறித்து அந்தப் பெண் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பில் புகார் செய்தார். அப்போது டிம் பெயினிடம் இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டதில் எந்த விதிமுறை மீறலும், ஒழுக்கக் கேட்டையும் செய்யவில்லை என முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், டிம் பெயின் அனுப்பிய குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் தற்போது வெளியாகின. இதுபோன்ற தரமற்ற செயல்களைச் செய்தவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனின் தகுதிக்கு உகந்தது அல்ல என்பதால் டிம் பெயின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
கேப்டன் பதவியிலிருந்துதான் ராஜினாமா செய்துள்ளதாகவும், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வில் இருப்பதாகவும் பெயின் தெரிவித்த நிலையில் தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஸ்மானியா கிரிக்கெட் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணிநேரமாக டிம் பெயினுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையின் முடிவில் டிம்பெயின் தற்காலிகமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகி இருக்க முடிவு செய்துள்ளார். இதனால், ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடாமாட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும் நிலையில், டிம் பெயின் இத்தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.