அபராதம் மேல் அபராதம்.. விரக்தியில் பைக்கை எரித்த வியாபாரி!

தெலுங்கானாவில் போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்ததன் காரணமாக வியாபாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நடு ரோட்டில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர் மக்பூல். அடிலாபாத்தில் வியாபாரம் செய்து வரும் மக்பூல் இன்று மதியம் அடிலாபாத்தில் உள்ள பஞ்சாப்சவுக் சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் கண்முன்னே நடுரோட்டில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி தீ வைத்து எரித்தார்.

அங்கிருந்த போலீசார், பொதுமக்கள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது பற்றி பின்னர் கூறிய மக்பூல், “ கடந்த சில நாட்களுக்கு முன் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

அதனை நான் செலுத்தி விட்டேன். இந்த நிலையில் இன்று மீண்டும் என்னை தடுத்து நிறுத்தி மேலும் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் கூறினர். நான் இப்போது வியாபார விஷயமாக சென்று கொண்டிருக்கிறேன்.

எனவே பின்னர் செலுத்துகிறேன் என்று கூறினேன். ஆனால் போலீசார் அபராதத்தை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுமாறு கூறிவிட்டனர். ஏதேதோ காரணங்களை கூறி போலீசார் தொடர்ந்து இதுபோல் செயல்படுகின்றனர். இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரே வழி மோட்டார் சைக்கிளை அழித்து விடுவது ஒன்றுதான் என்று முடிவுசெய்து இன்று தீ வைத்து எரித்தேன்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.