வடக்கு ஆளுநரின் எச்சரிக்கை சிறுபிள்ளைத்தனமானது; போராட்டத்தை அடக்க அவருக்கு அதிகாரமில்லை!

“வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான காணி அளவீடுகளுக்குத் தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆளுநரின் இந்த எச்சரிகை சிறுபிள்ளைத்தனமானது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து எழுப்பியிருந்த எதிர்ப்புக் குரல்களின் ஓர் அங்கமாகவே மாதகலில் காட்டப்பட்ட எதிர்ப்பும் அமைந்துள்ளது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தி 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும், போர் நிகழ்ந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பின் பிரசன்னம் என்பது போர்க்காலத்தைப் போலவே தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது. பல்வேறு படைத்தளங்களும் மேலும் விஸ்தரிக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களும் மேலும் விஸ்தரிக்கப்பட்டு வந்துள்ளன.

இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து இலங்கையில் கள்ளக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் 1957இல் காரைநகரில் நிறுவப்பட்ட கடற்படைத்தளம் தொடர்ந்து விஸ்தரிக்கப்பட்டு ஒரு பாரிய தளமாக நிலைத்து நிற்கையிலும் கூட இந்த விஸ்தரிப்புக்கள் தொடர்கின்றன.

இன்னுமோர் பாரிய கடற்படைத் தளம் காங்கேசன்துறையிலும் இருக்கின்றது. ஆயினும், மாதகலில் உள்ள கடற்படை முகாமின் தேவைக்காகத் தனியார் காணி ஒன்றை சுவீகரிக்கும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டு நடவடிக்கைகளுக்குபி பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது வடக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை, நீடித்துக் கொண்டிருக்கும் காணி அபகரிப்புப் பிரச்சினையை மேலும் சிக்கல் அடைய வைத்துப் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படக் கூடிய நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம்.

தம்மைப் பாதிக்கும் எந்தவொரு அரச நடவடிக்கைக்கும் எதிராக சமூகமட்டத்தில் எவரும் சட்டத்துக்கு அமைவாக எதிர்ப்புத் தெரிவிக்க முடியும். அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை நீதிமன்றங்களினாலும் பாதுகாக்கப்படுகின்றது.

மாதகல் உட்பட வடக்கில் தொடரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த உரிமையின் அடிப்படையிலேயே எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

வடக்கைப் பொறுத்த மட்டில் இது ஒன்றும் புதிய விடயமல்ல, புதிய ஆளுநர் வடக்குக்கு வருவதற்கு முன்பிருந்தே நிலை கொண்டு நீடித்து நிற்கும் விவகாரம்.

இந்தப் பிரச்சினையில் அதிகாரபூர்வமாகத் தலையிடுவதற்கு சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு இடமில்லை. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களோடு வடக்கு மாகாண சபை இயங்க முடியாமல் ஸ்தம்பிக்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் சகல அதிகாரங்களையும் கையாளும் ஆளுநருக்கு காணி மற்றும் பொலிஸ் துறை தொடர்பான எந்த அதிகாரமும் கிடையாது.

அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும் பொலிஸ் துறை சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் இன்னமும் பகிரப்பட்டிராத நிலையில், அந்த அதிகாரங்கள் எவையும் ஆளுநருக்குக் கிடையாது. மாறாக, இந்த அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளன. இதுதான் யதார்த்தம்.

நிலைமை இப்படி இருக்கையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஆளுநர் எச்சரிப்பது சிறுபிள்ளைத்தனமானது.

பதவி ஏற்ற கையோடு வடக்கில் வாள்வெட்டுக் குழுக்களை அடக்கப் போவதாக ஆளுநர் அறிவித்தபோது, அது நல்ல நிலைப்பாடாக இருந்தாலும், அது தொடர்பில் அவருக்கு அதிகாரம் இல்லை என்பதை அப்போது நாம் சுட்டிக்காட்ட விரும்பியிருக்கவில்லை. ஏனெனில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் எதிர் மறையான கருத்தோடு அவரை வரவேற்பது அரசியல் நாகரிகம் அல்ல என்றே நாம் கருதினோம்.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்வது போன்ற கனவுகள் கலைவது பொதுவாக சகலருக்கும் நன்மையானது.

காணி அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தமாக சட்டம் பாய வேண்டுமானால் கொழும்பிலிருந்து தான் அது ஏவப்பட வேண்டும். நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் அரசு, எவர் தூண்டினாலும் இன்றைய சூழ்நிலையில் அதனைத் தவிர்க்கவே விரும்பும் என்பது எமது கணிப்பு. மாறாக சட்ட நடவடிக்கைகள் தொடுக்கப்படுமானால், சிறு எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலாக பாரிய போராட்டங்களுக்கே அவை அடி கோலும்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கரிசனை காட்டும் அதேவேளையில் பொதுமக்களுக்கு எதிராக பொல்லுகளோடும் மிரட்டல்களோடும் அன்றைய தினம் மாதகலில் அரங்கேற்றப்பட்ட சட்டவிரோத சம்பவங்கள் பற்றியும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பிறப்பால் தமிழர். தகைமைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர். உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களைக் காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு அவர் முன்வர வேண்டும் என்பதே எமது ஒரேயொரு வேண்டுகோள்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.