வங்கி அதிகாரிகளின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை: மத்திய நிதியமைச்சா்

கடன் நடவடிக்கைகளில் வங்கி உயரதிகாரிகளின் அச்சங்களைப் போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடன் வழங்கல் நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரதிகாரிகளுக்கு கஷ்டங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த அசத்தை போக்கவும், வங்கிகளின் உண்மையான வா்த்தக முடிவுகளை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊழல் தடுப்புச் சட்டம் (பிசி ஆக்ட்) 1988-இல், ஒரு பொது ஊழியருக்கு எதிராக விசாரணையை தொடங்கும் முன் முன்னனுமதி பெறுவது, ரூ.50 கோடிக்கும் மேலாக மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது முதல் கட்ட ஆய்வை மேற்கொள்ள வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனை வாரியத்தை (ஏபிபிஎஃப்எஃப்) அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

மோசடி வழக்குகள் தவிர, ரூ.50 கோடிக்கும் மேலான வாராக் கடன் விவகாரங்களுக்காவும் ஒருங்கிணைந்த பணியாளா் பொறுப்புடமை கட்டமைப்பை உருவாக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துடனான ஆலோசனையின் பேரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சா் தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.