பிபின்ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை முதல் அந்த ஆஸ்பத்திரிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் வந்தனர். மேலும் பாதுகாப்பிற்காக ராணுவ ஆஸ்பத்திரி முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட இறந்த 13 பேரின் உடல்கள் பெட்டியில் வைக்கப்பட்டு, அதன் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்குகளில் ஏற்றப்பட்டன. இதையடுத்து இந்த ராணுவ டிரக்குகள், ஆஸ்பத்திரியில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு வந்தது.

வீரர்களின் உடல்களை சுமந்து வந்த ராணுவ டிரக்குகளுக்கு முன் ராணுவ இசைக்குழு இசைத்தபடி வந்தனர். தொடர்ந்து முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரது உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டது. தொடர்ந்து 3 டிரக்குகளில் இருந்தும் 13 பேரின் உடல்கள் இறக்கப்பட்டு, எம்.ஆர்.சி. முகாமில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

இதில் முதல் வரிசையில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 4 பேரின் உடல்களும், அடுத்த வரிசைகளில் 9 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்தன. முதலில் ராணுவ உயர் அதிகாரிகள் 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன், கா.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசீஸ் ராவத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியை சேர்ந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.25 மணிக்கு எம்.ஆர்.சி. ராணுவ மையத்திற்கு வந்தார். முதலில் அவர், பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அங்கு நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின், அங்கிருந்த பிற ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், முன்னாள் ராணுவ அதிகாரிகளை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து 11.35 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணுவ மையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், சீக்கியம் ஆகிய 4 மதத்தலைவர்கள் தங்களது மத நம்பிக்கைகளின் படி ராணுவ வீரர்களின் உடல்களுக்கு சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேரின் உடல்களை ஏற்றி செல்ல தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ராணுவ மையத்திற்கு வந்தன. ஒரு வாகனத்திற்கு ஒரு வீரரின் உடல் என 13 வாகனங்களில் உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றப்பட்டது.

இந்த அமரர் ஊர்தி வாகனங்கள் மதியம் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் இருந்து புறப்பட்டது. அமரர் ஊர்தி வாகனங்களுக்கு முன் போலீஸ் பைலட் வாகனமும், அதனைத்தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு வாகனமும் சென்றது.

இதேபோல் கடைசியில் ராணுவ பாதுகாப்பு வாகனமும் வந்தது. இந்த வாகனங்களில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் இருந்தனர்.

பின்னர் மதியம் 2.50 மணியளவில் சூலூர் விமானப்படை தளத்துக்கு அமரர் ஊர்திகள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து சூலூர் விமானப்படை தளத்தின் நுழைவு வாயில் வழியாக அமரர் ஊர்தி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் வழிநெடுக அமரர் ஊர்தியின் மீது மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள விமான ஓடுபாதைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் 13 பேரின் உடல்களும் அதில் இருந்து இறக்கப்பட்டு, அங்கு ஏற்கனவே தயாராக நின்ற சி-130 சூப்பர் ஹெர்குலிஸ் ரக ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டன.

பின்னர் அந்த சிறப்பு விமானம் மாலை 3.30 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த சிலரும் அந்த விமானத்தில் சென்றனர்.

கோவை சூலூரில் இருந்து புறப்பட்ட விமானம் தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தை நேற்று இரவு 7.35 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த வீரர்கள் விமானத்தில் இருந்து உடல்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வந்து வரிசையாக அடுக்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிபின்ராவத் உள்ளிட்டவர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அதனைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்திரி, மத்திய பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், மற்றும் ராணுவ உயர்அதிகாரிகளும், தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் லக்பிந்தர்சிங் விட்டர் ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

எனவே 3 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், மற்றவர்களின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகே ஒப்படைக்கப்படும் என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாலம் விமானநிலையத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிபின்ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் பிபின்ராவத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவத்தினர் செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.