மியான்மரில் 11 பேர் கொலை; ராணுவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம்.

மியான்மரின் வடமேற்கே சகெயிங் பகுதியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த ராணுவத்தினர், 11 பேரின் கை, கால்களை கட்டி உயிரோடு எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில்,

ஆங் சான் சூகீயின் ஆளுங்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என கூறி, நடப்பு ஆண்டில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. சூகீ உள்ளிட்ட தலைவர்களை வீட்டு சிறையில் வைத்து உள்ளது. இதற்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில், டோன் டாவ் கிராமத்திற்குள் திடீரென ராணுவம் புகுந்தது.

கிராமத்தினர் வெளியேறாதபடி சுற்றிலும் ராணுவத்தினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, கிராம மக்கள் 11 பேரை கைது செய்த ராணுவத்தினர், அவர்களின் கை, கால்களை கட்டி வட்டமாக நிற்க வைத்து தீ வைத்து எரித்துள்ளனர். இதில், 11 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகளாக ஆனார்கள் என்று நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன், டோன் டாவ் வழியே சென்ற ராணுவ வாகனங்கள் மீது குண்டு வீச்சு நடந்துள்ளது. இதற்கு பழி தீர்க்க ராணுவம், 11 பேரை உயிரோடு எரித்ததாக கூறப்படுகிறது. ‘இந்த சம்பவத்திற்கு காரணமான ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், மியான்மரில் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நம்பத்தக்க தகவல்கள் உள்ளன என மியான்மர் ராணுவம் மீது அமெரிக்கா சாடியுள்ளது. 11 பேரை சுற்றி வளைத்து மியான்மர் ராணுவ வீரர்கள் கொன்றதற்கான தகவல்களால் அமெரிக்கா கோபமடைந்து உள்ளது என அந்நாட்டு வெளியுறவு துறைக்கான செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.