கேணல் கடாபி படுகொலையான பின் நடக்கும் லிபிய தேர்தல் எப்போது? : சண் தவராஜா

லிபியாவில் நடைபெறவிருந்த அரசுத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்படாத நிலையிலேயே தேர்தல் ஒத்திவைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “போட்டியிட விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுள் ஒருசிலர் தொடர்பிலான சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதால் உரிய நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாத நிலை உள்ளது” என லிபியாவின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்பாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டிய தேவை உள்ளதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் தேர்தல் மற்றும் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல்கள் என்பவற்றை நடத்தி முடிப்பதில் ஐ.நா. சபை தலைமையில் மேற்குலகம் முனைப்புக் காட்டினாலும், வேட்பாளர்களாக யாரை அனுமதிப்பது என்பதில் தொடங்கி தேர்தல் நடைபெறும் நேரம் வரை பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் அடக்கி வாசிப்பது என்ற முடிவில் ஐ.நா. சபை உள்ளதாகத் தெரிகின்றது.

நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்குச் சுமூகத் தீர்வைக் காண்பதற்கான முயற்சியாகத் தேர்தல்களை நடாத்த முயன்று அதுவே மற்றொரு சுற்று ஆயுத மோதல்களுக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சமும் இல்லாமல் இல்லை.
லிபியாவின் நீண்டகால ஆட்சியாளரான கேணல் முஅம்மர் கடாபி பதவி கவிழ்க்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதன் பின்னான காலப்பகுதியில் நடைபெறும் முதலாவது அரசுத் தலைவர் தேர்தல் என்பதால் மட்டுமன்றி, நாட்டின் கிழக்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பீல்ட் மார்ஷல் கலீபா ஹாப்ரர் மற்றும் கேணல் கடாபியின் இரண்டாவது மகனான சைப் அல்-இஸ்லாம் ஆகியோர் போட்டி போடுவதாலும் இந்தத் தேர்தல் பெரிதும் கவனத்தைப் பெற்றிருந்தது.

பொதுவாக, உள்நாட்டு யுத்தம் நடைபெறும் நாடுகளில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னான காலப் பகுதியிலேயே, நாடு முழுமைக்குமான தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், லிபியாவைப் பொறுத்தவரை நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கள், பல்வேறு ஆயுதக் குழுக்கள், பல்வேறு கூலிப் படையினர், அந்நிய நாட்டுப் படையினர் என ஒன்றுக்கு ஒன்று முரணான பல அதிகார மையங்கள் உள்ள நிலையில் தற்போதைய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் போட்டியிட 98 பேர் விருப்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 25 மனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட மனுவில் சைப் அல்-இஸ்லாமின் மனுவும் அடக்கம். எனினும்; நீதிமன்றில் அவர் மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சைப் அல்-இஸ்லாம் ‘அவமானகரமான குற்றமொன்றில் தண்டிக்கப்பட்டவர் தேர்தல்களில் போட்டியிட முடியாது’ என்ற தேர்தல் விதிகளுக்கு அமைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தார்.

இந்த முடிவை எதிர்த்து ஷெபா நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டில் தேர்தல் திணைக்களத்தின் முடிவை ரத்துச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கேணல் கடாபியை ஒரு மோசமான, மனித குலத்துக்கு விரோதமான தலைவராகச் சித்திரிக்கும் மேற்குலகின் முயற்சிக்குக் கிடைத்த பாரிய அடியாக நீதிமன்றின் இந்த முடிவு அமைந்துள்ளது. கேணல் கடாபியின் கடந்தகாலத்தைக் கேவலப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவை அதிகரிக்கவே செய்கின்றது என்பதே யதார்த்தமாக உள்ளது.

அது மாத்திரமன்றி, 2001 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னான லிபியா, நிலையான ஆட்சி இன்றியும், பொருளாதார வளர்ச்சி குன்றியும் சிதறுண்டு கிடக்கின்றது. யார் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது என்பதே தெரியாத நிலையில் மக்கள் வாழும் நிலை உருவாகியுள்ளது.

கடாபி ஆட்சியில் கண்ணிலேயே தென்பட்டிராத வறுமை தற்போது லிபியாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சைப் அல்-இஸ்லாம் தனது தந்தை வழியில் நிலையான ஆட்சியொன்றை வழங்கக் கூடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது.

யூலை மாதத்தில் நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், “பத்தாண்டு கால குழப்பங்களுக்கு முடிவு கட்டும் விதமாக லிபியாவில் தொலைந்துபோன ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதே தனது இலக்கு” என சைப் அல்-இஸ்லாம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், இந்தத் தேர்தலில் செல்வாக்குமிக்க மற்றொரு வேட்பாளராகக் கருதப்படும் பீல்ட் மார்ஷல் கலீபா ஹாப்ரர் மீதும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

லிபிய இராணுவத்தில் பணியாற்றி, கேணல் கடாபியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமெரிக்காவில் குடியேறி, அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட ஹாப்ரர், சி.ஐ.ஏ. உளவாளியாகச் செயற்பட்டமை ஊரறிந்த உண்மை.

கடாபிக்கு எதிரான கிளர்ச்சியின் போது நாடு திரும்பிய இவர் அடுத்த அரசுத் தலைவர் ஆகக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் அது அவரால் முடியாமற் போன சூழலில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான பெங்காசியில் இருந்து கொண்டு ‘லிபிய தேசிய இராணுவம்’ என்ற படையைக் கட்டமைத்து அதற்குத் தலைமைதாங்கி வருகின்றார்.

இவரின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் உள்ளன. தலைநகர் திரிப்பொலியைக் கைப்பற்றும் நோக்குடன் இவரது படைகள் 2019 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த படைநடவடிக்கைகள் 14 மாதங்கள் நீடித்த போதிலும் தோல்வியிலேயே முடிந்தது. இந்தக் காலப்பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஹாப்ரரின் விண்ணப்பம் தேர்தல் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போதுவரையான போட்டியாளர்களுள் ஒரு முக்கியமான போட்டியாளராக இவரும் கருதப்பட்டு வருகின்றார்.

இவர்கள் இருவரையும் தவிர, தற்போதைய அரசாங்கத்தில் சபாநாயகராக விளங்கும் அகுயிலா சாலே மற்றொரு முக்கியமான போட்டியாளராகக் கருதப்படுகின்றார். நடுநிலை வாக்காளர்களின் விருப்பத்துக்குரிய வேட்பாளராக இவர் இருப்பார் என்கின்றனர் நோக்கர்கள்.

முக்கியமான வேட்பாளர்கள் வாக்குகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள அறிமுகமே இல்லாத ஒருவர் அதிக வாக்குகளுடன் முன்னணிக்கு வந்துவிடக் கூடும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இல்லை.

ஆனால், தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் அதன் முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேட்பாளர்கள் முதல் வாக்காளர்கள் வரை உள்ளதா என்பது மிகப் பாரிய கேள்வியாக உள்ளது.

தனது விண்ணப்பம் நிரகரிக்கப்பட்டமையை எதிர்த்து சைப் அல்-இஸ்லாம் மேன்முறையீடு செய்த போது, வழக்கை விசாரிக்கும் நிதிமன்றத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இதனால் வழக்கு விசாரணைக்கு முன்னதாக ஒரு சில மணித்தியாலங்கள் நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல சம்பவங்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கின்றன.

தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் முதல் வாக்காளர்கள் வரை ஏற்றுக் கொண்டாலும், தேர்தலைத் தூண்டிவரும் ஐ.நா. சபையும் மேற்குலகமும் அதனை ஏற்றுக் கொள்ளுமா என்கின்ற கேள்வியும் இருக்கின்றது.

தங்களுக்கு விருப்பமில்லாத(?) ஒருவர் தேர்தலில் வெற்றிபெறுமிடத்து அவருடன் எவ்வாறு இணைந்து பணியாற்றவது என்கின்ற சங்கடம் மேற்குலகிற்கு இயல்பாகவே எழக் கூடும். தங்களுக்கு விருப்பமில்லாத இருவர் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட நிலையில் தொடர்ந்தும் தேர்தலை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டில் மேற்குலகம் இருக்குமா? அல்லது பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி காலவரையறையின்றி தேர்தல்கள் பின்போடப்படுமா? அல்லது தங்களுக்குப் பிடித்தமில்லாதவர்கள் பட்டியலில் இருந்து ஏதோவொரு வகையில் அகற்றப்படும் வரை இழுத்தடிக்கப்படுமா?

காலம்தான் பதில் சொல்லும்.

Leave A Reply

Your email address will not be published.