டி காக் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.

கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பராக மூன்று வித கிரிக்கெட்டிலும் அசத்திக் கொண்டிருந்தவர் டீகாக். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் தென்ஆப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தவர் இவர். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட்டத்தின் போக்கே மாறி உள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இவர் விளையாடினார்.

களத்தில் இவர் இருக்கும் வரை இந்திய அணியின் ரசிகர்கள் பயத்திலேயே இருந்தனர். எங்கு இவர் விரைவாக ரன் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை பறித்து விடுவாரோ என்று பலரும் பயப்படும் அளவிற்கு இவரது ஆட்டம் சிறப்பாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட வீரர் தற்போது திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதால் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்த தொடரில் இவர் விளையாடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பலரும் எதிர்பாராதவிதமாக திடீரென்று இவர் ஓய்வை அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் மிகவும் கடினமான மனதுடனே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த உலகத்திலேயே தனக்கு தன்னுடைய குடும்பம் தான் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தனக்கு மிகவும் பிடித்தமான ஆட்ட முறை என்றும் தன்னுடைய நாட்டுக்காக விளையாடுவதுதான் தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றும் கூறியுள்ள இவர் தற்போது அதைவிட பிடித்த விஷயங்கள் வந்து விட்டதாக கூறியுள்ளார். உலகத்தில் எதை திரும்ப வாங்கினாலும் இழந்துபோன நேரத்தை வாங்க முடியாது என்றும் கூறியுள்ள இவர் சிறுவயதில் இருந்து தனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மொத்தமாக ஓய்வு பெறவில்லை என்றும் இன்னமும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட விரும்புவதாகவும் டிகாக் கூறியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இதே நாளில்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மத்தியில் தோனி ஓய்வு பெற்றார். அதேபோலவே தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் டிகாக்கும் ஓய்வு பெற்று உள்ளதால் அந்நாட்டு ரசிகர்களுக்கு இது மிகப் பெரும் கவலையை அளித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.