2022ம் ஆண்டில் ‘சீன அபாயம்’? உலகை ஆளுமா சீனா? : சுவிசிலிருந்து சண் தவராஜா

புதிய ஆண்டில் உலகம் காலடி பதித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாப் பெருந்தொற்றுக்கு நடப்பு ஆண்டிலாவது முடிவு வராதா என ஏங்கிய வண்ணம் உலக மாந்தர் உள்ளனர்.

தடுப்பு மருந்துகள் பலவும் சந்தையில் இருந்தாலும், நாளுக்கு நாள் புதிய அவதாரம் எடுக்கும் கொரானாத் தீநுண்மியின் அச்சுறுத்தல் மென்மேலும் அதிகரிக்கவே செய்கின்றது. எத்துணை துயரம் இருந்தாலும், மனிதகுலம் நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் அன்றாட நிகழ்வுகள் நடைபெறாமல் இல்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குடும்ப நிகழ்வுகள் முதல் பொது நிகழ்வுகள் வரை – உள்ளூர் சட்டங்களை அனுசரித்து – நடந்த வண்ணமேயே உள்ளன. அரசியல் நிகழ்வுகள் முதல் தேர்தல்கள் வரை தடையின்றித் தொடரவே செய்கின்றன. உலகமே பொதுவில் பெருந் தொற்று அபாயத்தை எதிர்கொண்டாலும் கூட, நாடுகள், கூட்டணிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப மோதல் போக்கைத் தொடரும் சம்பவங்களும் நடைபெற்று வருவதையும் பார்க்க முடிகின்றது. கடந்த வருடத்தில், புதிதாகப் போர்கள் உருவாகவில்லை என்பது ஒரு ஆறுதலான விடயமாக இருந்தாலும், ஏற்கனவே நடைபெற்றுவரும் போர்களின் களங்கள் கொதிநிலையிலேயே இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த வருடத்தைப் பொறுத்தவரை அனைத்து ஊடகங்களிலும் அதிகமாக இடம்பிடித்த செய்தி கொரோனப் பெருந் தொற்றுத் தொடர்பானதாகவே இருந்தது.

அடுத்த இடத்தில் – குறிப்பாக மேலைநாட்டு ஊடகங்களில் – இடம்பிடித்திருந்த செய்தி ‘சீன அபாயம்’ பற்றியதாக இருந்தது. சிறி லங்காவின் உள்நாட்டு அரசியல் முதல் உலகின் வர்த்தக அரங்கு வரை இது தொடர்பில் பேசப்பட்டது. உலகின் பொருளாதார வல்லரசு என்ற தகுதியை இதுகாறும் வகித்து வந்த அமெரிக்கா, எந்தக் கணத்திலும் இந்தத் தகுதியை சீனாவிடம் பறிகொடுத்து விடலாம் என்கின்ற நிலை உருவாகியுள்ள சூழ்நிலையில், ‘சீன அபாயம்’ தொடர்பான செய்திகள் மேலைநாட்டு ஊடகங்களில் அதிகம் இடம்பெறுவதில் வியப்பொன்றும் இல்லை.

இது தவிர, தாய்வான் விவகாரத்தில் மேற்குலகு சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள நிலையில் அந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையிலும் ‘சீன அபாயம்’ தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகின்றது.

மேற்குலகு விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகவும், இராணுவ வல்லரசாகவும் சீனா உருவாகுவதைத் தடுத்துவிட முடியாது என்பதே யதார்த்தம்.

இன்று சீனாவுடன் பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளாத நாடுகளே இல்லை எனும் அளவிலேயே நிலைமைகள் உள்ளன. இதில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பலவும் அடக்கம். சுதந்திரப் போராட்டங்களுக்குப் பிந்திய ஆபிரிக்கக் கண்டத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார, உட்கட்டுமான அபிவிருத்தியில் சீனாவின் பங்கு மிக முக்கியமானது.

தற்போது ஆசிய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் இத்தகைய தனது பங்களிப்பை அதிகரிப்பதில் சீனா முனைப்புக் கொண்டுள்ளமையையும் பார்க்க முடிகின்றது.

‘உலகின் காவல் காரன்’ என வகைப்படுத்தப்படும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் கொள்கையிலேயே உள்ளது.

தனது நிதியை அனுசரணையைப் பெற்றுக் கொள்ளும் எந்தவோரு நாடாகினும் தான் விதித்த கொள்கையையே பின்பற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு.

ஆனால், சீனா அத்தகைய எந்தவொரு நிபந்தனையையும் பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ முன்வைப்பதில்லை என்பதே இரண்டு நாடுகளின் அணுகுமுறையிலும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மக்கள் சீனா உருவாகிய நாள் முதல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் உலகில் தொடுத்த போர்கள் எத்தனை என்பதை உலகறியும்.

முதல் போரான கொரிய யுத்தம், புதிதாகப் பிறப்பெடுத்திருந்த மக்கள் சீனத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகமாக யுத்தமாகவே நடந்து முடிந்தது. இந்தப் போரில் அமெரிக்கா அவமானகரமான முறையில் தோல்வியைத் தழுவியிருந்து. இத்தகைய தோல்வியை வியட்நாம், கம்போடியா, லாவோஸ் எனத் தொடர்ந்தும் அமெரிக்கா காண சீனாவும் ஒரு மிகமுக்கிய காரணமாகியது.

இன்றைய தருணத்தில் அமெரிக்காவிற்குச் சொந்தமான 750 இராணுவத் தளங்கள் உலகின் 75 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா முதல் ஆசியா வரை உலகின் அனைத்துக் கண்டங்களிலும் இவை வியாபித்துக் கிடக்கின்றன. இதுபோன்ற ஆயிரம் படைத் தளங்கள் ஜோர்ஜ் புஷ் மற்றும் பில் கிளின்ரன் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மூடப்பட்டதாக தரவுகள் உள்ளன.

அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் உலகின் ஒன்றிரெண்டு நாடுகளிலேயே சீனாவுக்கென படைத் தளங்கள் உள்ளன. தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியக் கரையோரமாக உள்ள தீவுகளில் 8 படைத் தளங்களை சீனா நிர்மாணித்துள்ளது.

இவற்றைத் தனது கடலாதிக்கத்தில் உள்ள பகுதி எனக் கூறிவரும் சீனா, தற்காப்புக்காகவே இந்தப் படைத் தளங்களை நிர்மாணித்து வருகிறது. இவை தவிர, ஆபிரிக்காவின் ட்ஜிபுற்றி எனும் சிறிய நாட்டில் சீனாவுக்கான ஒரு கடற்படைத் தளம் உள்ளது. கடற் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்தப் படைத் தளம் அமைக்கப்பட்டது. இவை தவிர, ஐக்கிய அரபு அமீரகம், ஈக்குவற்றோரியல் கினி மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் ‘இரகசிய படைத் தளங்களை’ சீனா நிர்மாணித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவோ தனது படைத் தளங்களில் இருந்து படை நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமன்றி அல்-கைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்குப் பயிற்சியளிப்பதற்காகவும் அவற்றைப் பாவித்து வருகின்றது.

1980 முதல் இன்றுவரை மத்திய கிழக்கில் உள்ள தனது படைத் தளங்களில் இருந்து மட்டும் அமெரிக்கா 25 வரையான படை நடவடிக்கைகளை 15 நாடுகளில் மேற்கொண்டு உள்ளது.

இத்தனைக்கும் மத்தியிலும் ‘சீன அபாயம்’ பற்றியே மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் சீனத் தலையீடு தொடர்பான ஒரேயொரு எடுத்துக் காட்டு சீனாவினுடைய உண்மையான நோக்கம் தொடர்பில் விளக்குவதற்குப் போதுமானது.

2003இல் ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி மேற்கொண்ட படை நடவடிக்கைகளின் விளைவாக அந்த நாட்டில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகிப் போனமை உலகறிந்த உண்மை. இலட்சக் கணக்கானோர் உலகின் பல பகுதிகளிலும் இன்றும் கடும் துயரங்களை அனுபவித்த வண்ணம் அகதிகளாக உள்ளனர். அந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மிகவும் அதிகமானது.

இத்தனைக்கும் காரணமான படையெடுப்பின் பின்னர் அந்த நாட்டில் இருந்து 2011இல் வெளியேறிய அமெரிக்கப் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் மீண்டும் 2014இல் நுழைந்து இன்றுவரை அந்த நாட்டில் நிலைகொண்டு உள்ளன.

ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலம் தெரிவான அரசாங்கம் “அமெரிக்கப் படைகளை வெளியேற்றிக் கொள்ளுமாறு” தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அந்த நாட்டில் இருந்து வெளியேற மறுக்கும் அமெரிக்கப் படைகள் இன்னமும் அங்கு நிலைகொண்டுள்ள நிலையில், சீனாவுக்கும் தற்போதைய ஈராக்கிய அரசாங்கத்திற்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகி உள்ளது. வழக்கம் போலவே ‘சீன அபாயம்’ தொடர்பாக மேலை நாட்டு ஊடகங்கள் கதற ஆரம்பித்துவிட்டன.

ஆனால், சீனாவின் புதிய ஒப்பந்தம் ஈராக்கில் புதிதாக ஆயிரம் பாடசாலைகளை நிர்மாணிப்பது தொடர்பானது. புதிய ஒப்பந்தத்தின்படி ‘பவர் சைனா’ நிறுவனம் 679 பாடசாலைகளையும் ‘சினோ ரெக்’ நிறுவனம் மீதி 321 பாடசாகைளையும் நிர்மாணிக்க உள்ளன.

இதுவொன்றே சீனாவின் உண்மையான நோக்கத்தை எடுத்துக் காட்டப் போதுமானது. இதற்கும் அப்பால் உலகின் பல நாடுகளில் சீனா மேற்கொண்டுவரும் பொருளாதார உதவிகள் அந்தந்த நாடுகளின் உட்கட்டுமானங்களை விருத்தி செய்வதில் மிகப் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது என்பதை மறுக்க முடியாது.

தனது பொருளாதார வல்லமையைக் கொண்டு போர்களையும், அழிவையும் பரிசளிக்கும் மேற்குலகம், எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது நிலைபேறான அபிவிருத்தியில் மாத்திரம் கரிசனை கொண்டு செயற்படும் சீனாவைக் குறை சொல்வது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்க முடியும்?

Leave A Reply

Your email address will not be published.